கேரளம் : முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனைச் சுற்றி பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. அவரது மகள் டி.வீணாவிற்கு சொந்தமான நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் சட்டவிரோதமாக பணம் பரிமாறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, கேரளத்தின் பல பகுதிகளில் குறைந்தது 10 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் பினராயி விஜயனின் இல்லம் மற்றும் முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸின் கோழிக்கோடு இல்லமும் அடங்கும்.
இந்த வழக்கின் மையமாக இருப்பது “எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ்” என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனம் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்கு சொந்தமானது. 2018 முதல் 2019 வரை, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டைல் லிமிடெட் (CMRL) நிறுவனம், எந்த சேவையும் பெறாமல் ரூ.1.72 கோடி தொகையை எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு வழங்கியதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
இந்த பண பரிவர்த்தனைகள் முதலில் வருமான வரித்துறையின் இடைக்கால தீர்வு வாரியத்தின் கவனத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த தொகை உண்மையான வணிகச் செலவாக இருக்க முடியாது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. இதையடுத்து, 2024 ஜனவரியில் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் மூலம் தனி விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதே ஆண்டில் அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, CMRL நிறுவன அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியது. இதற்கு எதிராக அந்த நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியிருந்தது.
இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறையின் விசாரணையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. மேலும், விசாரணைக்கு தடை விதிக்கவும் நீதிமன்றம் மறுத்ததால், அமலாக்கத்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
நீதிபதி டி.ஆர்.ரவி தனது உத்தரவில், “இப்போதைக்கு சம்மன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் தனியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்த பண பரிவர்த்தனைகள் சட்டவிரோத நன்மை வழங்கலா? அல்லது பணமோசடி தடுப்பு சட்டத்தை மீறி பணம் மாற்றப்பட்டதா? என்பதையும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனுடன் தொடர்புடைய மற்றொரு பரபரப்பு சம்பவமாக, பினராயி விஜயனின் பாதுகாப்பு பிரிவில் இருந்த 5 காவல்துறை பணியாளர்களை கேரள அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
2023ஆம் ஆண்டு நவகேரள யாத்திரை எதிர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாணவர் அமைப்பினர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.புதிய முதலமைச்சராக பதவியேற்ற வி.டி.சதீசன் அமைத்த சிறப்பு விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் பேரிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
