டெல்லி :பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தியாவில் உருவாகி வரும் “வெள்ளை காலர் தீவிரவாதம்” என்ற ஆபத்தான போக்கு குறித்து கடும் கவலை தெரிவித்தார். உயர் கல்வி பெற்றவர்கள், சமூகத்துக்கும் நாட்டுக்கும் எதிராக செயல்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், “கையில் டிகிரி வைத்திருக்கிறார்கள், பாக்கெட்டில் RDX வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.
டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் மருத்துவர்கள் என்ற உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.“மருந்துச் சீட்டில் Rx என்று எழுதும் மருத்துவர்கள், கைகளில் RDX வைத்திருக்கின்றனர். இது கல்வியுடன் மதிப்புகள், பண்புகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது” என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். தீவிரவாதிகள் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி பட்டங்கள் பெற்றிருக்கலாம், ஆனால் அவர்களுக்கு ஞானம் இல்லாததால் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்த “வெள்ளை காலர் தீவிரவாதம்” போக்கு நாட்டுக்கு புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். உயர் கல்வி பெற்றவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவது சமூகத்துக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்வி மட்டும் போதாது, அதனுடன் நல்ல மதிப்புகள், பண்புகள் வளர்க்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.ராஜ்நாத் சிங்கின் இந்தக் கருத்து தீவிரவாதத்தின் புதிய வடிவம் குறித்து நாடு தழுவிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
கல்வி நிறுவனங்களில் மதிப்புகள் கல்வியை வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க கல்வி, சமூக விழிப்புணர்வு ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.இந்தப் பேச்சு தேசிய பாதுகாப்பு மற்றும் கல்வி முறை குறித்து புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
