டெல்லி :செங்கோட்டை அருகே நேற்று (நவம்பர் 10) மாலை நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் டெட்டனேட்டர் மற்றும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது விசாரணையில் உறுதியாகியுள்ளது. என்ஐஏ, என்எஸ்ஜி, டெல்லி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காரில் இந்த வெடிபொருட்கள் பொருத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வெடிப்பு பலமாக நடந்து 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சம்பவம் பயங்கரவாத தாக்குதலாகவே விசாரிக்கப்படுகிறது. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் நேற்று 3,000 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது டெல்லி குண்டுவெடிப்புடன் தொடர்புடையதா என்றும் தீவிர விசாரணை நடக்கிறது. காரில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் டீசல் அல்லது பெட்ரோல் போன்ற எண்ணெயுடன் கலந்து வெடிபொருள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. காரை ஓட்டி வந்த மருத்துவர் முகமது உமர் நபி தலைமறைவாக உள்ளார், அவரது தாய் மற்றும் சகோதரர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெட்டனேட்டர் என்றால் என்ன?
டெட்டனேட்டர் என்பது ஒரு சிறிய வெடிகுண்டு போன்ற சாதனம். இது மின்சாரம் அல்லது தீப்பொறி மூலம் செயல்படுத்தப்பட்டு, பெரிய வெடிபொருட்களை (அமோனியம் நைட்ரேட் போன்றவை) வெடிக்க வைக்கும் தொடக்க சாதனமாகப் பயன்படுகிறது. இது வெடிபொருளை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் வெடிக்கச் செய்ய உதவுகிறது. சுரங்க வேலை, கட்டிட இடிப்பு போன்ற சட்டப்பூர்வ பணிகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு தவறாகப் பயன்படுத்துகின்றனர்.
அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?
அதைப்போல அமோனியம் நைட்ரேட் என்பது ஒரு வெள்ளை நிற உரம் போன்ற ரசாயனப் பொருள். விவசாயத்தில் உரமாகவும், சுரங்கங்களில் வெடிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது எரிபொருளுடன் கலந்தால் பெரிய வெடிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டது. டெல்லி கார் வெடிப்பில் இதைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற ரசாயனங்கள் சட்டவிரோதமாக கிடைத்தால் பெரும் அழிவை ஏற்படுத்தும். மேலும் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதன் காரணமாக, அடுத்ததடுத்த தகவலும் இது பற்றி வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
