பீகார் கோயில் விழாவில் கூட்ட நெரிசல் – 8 பெண்கள் பலி!

நாளந்தா மாவட்டத்தில் உள்ள சீத்லா மாதா கோயில் திருவிழாவில் இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழந்தனர்.

Hero Image

பீகார் : மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஷீதலா மாதா கோயிலில் நேற்று (மார்ச் 31) நடைபெற்ற கோயில் விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 8 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோயில் வளாகத்தில் பக்தர்கள் அளவுக்கு அதிகமாகக் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் தள்ளு முள்ளு ஏற்பட்டு, பலர் தரையில் விழுந்து மயங்கினர்.

சம்பவ இடத்தில் இருந்து வெளியான படங்களில் பல பெண்கள் நினைவின்றி தரையில் கிடப்பது போன்ற காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.நாளந்தா மாவட்டத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஷீதலா மாதா கோயிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். குறிப்பாக இது சைத்ர மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. “யாரும் வரிசையில் நிற்க விரும்பவில்லை. அனைவரும் முதலில் தரிசனம் செய்ய முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டது” என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து பீகார் ஷரீப் உதவி காவல் கண்காணிப்பாளர் நூருல் ஹக் கூறுகையில், “காலை நேரத்தில் ஷீதலா மாதா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 8 பெண்கள் உயிரிழந்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பீகார் அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் இழப்பீடு (ரூ.4 லட்சம் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்தும், ரூ.2 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்தும்) அறிவித்துள்ளார்.

காயமடைந்தோருக்கு உரிய மருத்துவ உதவி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.பிரதமர் அலுவலகமும் இந்தச் சம்பவத்துக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 உதவியும் அறிவித்தார். “நாளந்தா மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று பிரதமர் அலுவலகம் X-இல் பதிவிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நடைபெற்ற அதே நாளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளந்தாவுக்கு வருகை தந்திருந்தார். அவர் அருகிலுள்ள நாளந்தா பழங்கால இடிபாடுகளைப் பார்வையிட திட்டமிட்டிருந்த நிலையில், அனைத்து மூத்த நிர்வாக அதிகாரிகளும் ஜனாதிபதி வருகைக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததால், கோயில் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்று சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த விபத்தில் உயிரிழந்த 8 பெண்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, பீகார் துணை முதலமைச்சர் சம்ராட் சவுத்ரி உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் செய்திகளைப் பதிவிட்டுள்ளனர்.

பீகார் கோயில் விழாவில் கூட்ட நெரிசல் – 8 பெண்கள் பலி!