நாடு முழுவதும் 2,300 ஏ.டி.எம்.கள் மூடல்! என்ன காரணம்?

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது குறைவு அதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Featured image

டெல்லி :இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் அளவு குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சுமார் 2,300 ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவிக்கிறது. யூபிஐ, மொபைல் பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் முறைகள் பிரபலமடைந்ததால் பணம் எடுக்க ஏடிஎம்களை நாடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனால் வங்கிகள் ஏடிஎம் பராமரிப்பு செலவைக் குறைக்கும் வகையில் மையங்களை மூடி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏடிஎம் பயன்பாடு குறைவு ஏற்பட்டுள்ளது. பல கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதால் ஏடிஎம் தேவை குறைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.இந்த மாற்றம் வங்கிகளுக்கு செலவு குறைப்பு என்றாலும், இன்டர்நெட் இணைப்பு இல்லாத இடங்களில் வாழும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக முதியவர்கள், கிராமப்புற மக்கள் போன்றோர் டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.ஏடிஎம் மையங்களை முழுமையாக மூடாமல் தேவையான இடங்களில் தொடர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வங்கிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதுடன், பணம் எடுக்கும் வசதியையும் பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இந்த போக்கு இந்தியாவின் பொருளாதாரத்தில் டிஜிட்டல் மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. இருப்பினும், அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் வங்கி சேவைகள் அமைய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ரிசர்வ் வங்கி இதை கண்காணித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.