உத்தரகாசி :உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 50 பேர் வரை காணாமல் போனதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மலையடிவாரத்தில் ஹர்ஷில் பகுதியில் இருந்த ராணுவ முகாமும் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் 11 வீரர்கள் வரை நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த பேரிடர் தாராலி கிராமத்திற்கு அருகில் பிற்பகல் 1:45 மணியளவில் ஏற்பட்டது. மேகவெடிப்பால் பெருமழை ஏற்பட்டபோது ஹர்சில் முகாமில் இருந்த வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டனர், தங்களது வீரர்கள் காணாமல் போன நிலையிலும் ராணுவம் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பேரிடர் வீடுகளை அழித்து, மக்களை வெள்ளத்தில் அடித்துச் சென்றது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மீட்பு பணிகள் சவாலாக உள்ளன. இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF), மாநில பேரிடர் மீட்பு படை (SDRF) மற்றும் உள்ளூர் நிர்வாகம் தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உத்தரகாசி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
