சென்னை : தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ஜனநாயகன்” இன் பல முக்கிய காட்சிகள் மற்றும் முழுப் படமும் இணையத்தில் கசிந்து பரவி வரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தைத் தயாரித்த KVN Productions LLP நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கசிந்த காட்சிகளைப் பதிவிறக்கம் செய்பவர்கள், பார்ப்பவர்கள், சேமிப்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:“நாங்கள் KVN Productions LLP, ‘ஜனநாயகன்’ என்ற சினிமா படத்தின் தயாரிப்பாளர்களும், பிரத்தியேக காப்புரிமை உரிமையாளர்களும் ஆவோம். சில மர்ம நபர்கள் படத்தின் சில காட்சிகளையும், சில சமயங்களில் முழுப் படத்தையும் சட்டவிரோதமாக அணுகி, நகலெடுத்து, பரப்பி வருவது எங்களுக்கு தெரியவந்துள்ளது. இது டிஜிட்டல் திருட்டின் (digital piracy) தீவிரமான அச்சுறுத்தலாக உள்ளது.
இந்தக் கசிந்த உள்ளடக்கத்தை WhatsApp, Telegram, Instagram, Facebook, X, YouTube, வெப்சைட்கள், டாரண்ட் அல்லது வேறு எந்த ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, பார்ப்பது, சேமிப்பது, பகிர்வது, அப்லோட் செய்வது அல்லது பரப்புவது ஆகிய அனைத்தும் குற்றம் மற்றும் காப்புரிமை சட்டத்தை மீறும் செயல் ஆகும். ஒவ்வொரு டிஜிட்டல் செயலும் traceable ஆகும். நாங்கள் ஏற்கனவே தேவையான விசாரணைகளைத் தொடங்கியுள்ளோம்.
Forensic விசாரணை உட்பட, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார் அளித்துள்ளோம். பரப்பும் சங்கிலியில் உள்ள அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் இந்தக் கசிந்த உள்ளடக்கத்துடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இதில் ஈடுபடுபவர்கள் உடனடியாக சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார்கள். இத்தகைய உள்ளடக்கம் உங்களுக்கு வந்தால், அதைத் திறக்காமல், சேமிக்காமல், பகிராமல் உடனடியாக நீக்கிவிடுங்கள்.”இந்த அறிக்கை வெளியான பிறகு, “ஜனநாயகன்” படத்தின் கசிவு சம்பவம் தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
தவெக தரப்பு இதை “திட்டமிட்ட மிரட்டல் செயல்” என்று விமர்சித்துள்ள நிலையில், படக்குழு சட்டரீதியான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தச் சம்பவம் அரசியல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
