பெட்ரோல் விலை டென்ஷனா? ரூ.1.5 லட்சத்துக்குள் செம மைலேஜ் தரும் 3 பைக்குகள் இதோ!

ரூ.1.5 லட்சத்துக்குள் வாங்கக்கூடிய அதிக மைலேஜ் தரும் டாப் 3 பைக்குகள். Hero Xtreme 125R, Bajaj Freedom 125, TVS Raider 125 ஆகியவற்றின் விலை, மைலேஜ் மற்றும் முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Hero Image

டெல்லி : தமிழ்நாட்டில் தினமும் வேலைக்கு, காலேஜுக்கு அல்லது சொந்த ஊர் பயணங்களுக்குப் பைக்கில் செல்லும் பலருக்கும் பெட்ரோல் செலவு என்பது பெரிய தலைவலி பிரச்சினையாகவே இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பைக் நிறுவனங்கள் இப்போது எல்லாமே லேட்டஸ்ட் ஸ்டைல், அசத்தலான தோற்றம் மற்றும் செம மைலேஜ் தரும் மாடல்களைக் களமிறக்கியுள்ளன.

எனவே, ரூ.1.5 லட்சம் என்ற பட்ஜெட்டுக்குள் நீங்கள் தாராளமாக வாங்கக்கூடிய, சந்தையில் இப்போது ஹிட்டடித்து வரும் டாப் 3 பெட்ரோல் பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலை மற்றும் மைலேஜ் கணக்குகள் எப்படி இருக்கும் என்று முழுமையாக தெரிந்துக்கலாம் வாங்க...

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R)

இளைஞர்களைக் கவரும் வகையில் செம மாடர்னாகவும், ஒரு பெரிய ஸ்போர்ட்ஸ் பைக் போலவும் முரட்டுத்தனமான தோற்றத்துடன் வந்துள்ள இந்த பைக், இப்போது பைக் பிரியர்கள் மத்தியில் ஹாட் ஃபேவரைட்டாக மாறியுள்ளது.

எவ்வளவு மைலேஜ் தரும்?

இந்த பைக்கை நாம் தினமும் சிட்டி டிராஃபிக்கில் ஓட்டும்போது, ஒரு லிட்டர் பெட்ரோலுக்குக் குறைந்தது 58 முதல் 62 கி.மீ வரை தாராளமாக மைலேஜ் கிடைக்கும். அதுவே நல்ல திறந்தவெளி நெடுஞ்சாலையில் (Highway) சீரான வேகத்தில் ஓட்டிச் சென்றால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சரியாக 66 கி.மீ வரை மிகச்சிறந்த மைலேஜைப் பெற முடியும்.

விலை நிலவரம் என்ன?

IBS (சாதாரண பிரேக்) மாடல்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 91,500 என்றும், தமிழ்நாட்டில் ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 1,12,000 என்றும் விற்கப்படுகிறது.

ABS (ஆன்டி-லாக் பிரேக்) மாடல்: இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 97,000 என்றும், ஆன்-ரோடு விலை தோராயமாக ரூ. 1,19,500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

இதில் 124.7சிசி எஞ்சின் கொடுக்கப்பட்டுள்ளது. வண்டி நல்ல பிக்கப் மற்றும் வேகத்தைக் கொடுக்கும். பெரிய பைக்குகளில் இருப்பது போல அகலமான டயர்கள், சுற்றிலும் எல்இடி லைட்டுகள் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை உடனுக்குடன் காட்டும் புளூடூத் வசதியுடன் கூடிய டிஜிட்டல் மீட்டர் போன்ற பல நவீன அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

பஜாஜ் ஃபிரீடம் 125 (Bajaj Freedom 125)

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போவதால் டென்ஷன் ஆவோருக்காகவே, உலகிலேயே முதல்முறையாக பெட்ரோல் மற்றும் கேஸ் (CNG) ஆகிய இரண்டு எரிபொருட்களிலும் ஓடும் வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட பைக் தான் இந்த பஜாஜ் ஃபிரீடம் 125.

எவ்வளவு மைலேஜ் தரும்?

இந்த பைக்கை நீங்கள் பெட்ரோல் மோடில் மாற்றி ஓட்டினால், சிட்டி மற்றும் நெடுஞ்சாலைகளில் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சரியாக 65 கி.மீ வரை மைலேஜ் தரும். ஒருவேளை நீங்கள் கேஸ் (CNG) மோடில் இயக்கினால், ஒரு கிலோ கேஸுக்குக் கிட்டதட்ட 102 கி.மீ வரை மிரட்டலான மைலேஜை அள்ளிக் கொடுக்கும்.

விலை நிலவரம் என்ன?

ஆரம்ப நிலை டிரம் பிரேக் மாடல்: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 95,000 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,15,000).

நடுத்தர எல்இடி மாடல்: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,05,000 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,26,000).

டாப் எண்ட் டிஸ்க் பிரேக் மாடல்: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,10,000 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,32,000).

முக்கிய சிறப்பம்சங்கள்:

இதன் ஹேண்டில்பாரில் ஒரு சிறிய பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். அதை லேசாகத் திருப்புவதன் மூலமாக ஓடிக்கொண்டிருக்கும் போதே பெட்ரோலில் இருந்து கேஸுக்கோ அல்லது கேஸில் இருந்து பெட்ரோலுக்கோ மாற்றிக்கொள்ளலாம். இந்தச் பிரிவிலேயே மிக நீளமான இருக்கை இதில் இருப்பதால், குடும்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்தாலும் முதுகுவலியோ அல்லது சோர்வோ சுத்தமாக இருக்காது.

டிவிஎஸ் ரெய்டர் 125 (TVS Raider 125)

ரொம்ப சைலண்டான எஞ்சின் மற்றும் கலக்கலான டிஜிட்டல் தொழில்நுட்ப அம்சங்களை விரும்பித் தேடும் இளம் தலைமுறை ரைடர்களுக்கு இந்த டிவிஎஸ் ரெய்டர் ரொம்பவே பிடிக்கும்.

எவ்வளவு மைலேஜ் தரும்?

இந்த பைக்கை நாம் நகருக்குள் (City) டெய்லி ஓட்டும்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சராசரியாக 57 கி.மீ மைலேஜ் வரை கிடைக்கும். இதுவே நெடுஞ்சாலையில் வேகத்தைக் கொஞ்சம் குறைத்து, பைக்கில் உள்ள 'இக்கோ மோட்' (Eco Mode) ஆன் செய்து ஓட்டினால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்குச் சரியாக 60 முதல் 62 கி.மீ வரை மைலேஜ் தந்து நம்மை அசரடிக்கும்.

விலை நிலவரம் என்ன?

சிங்கிள் சீட் மாடல்: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 97,054 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,18,000).

டபுள் சீட் மாடல்: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 98,719 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,20,000).

சூப்பர் ஸ்காட் எடிஷன்: எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,00,919 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,22,500).

டாப் மாடல் (SmartXonnect): எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1,07,719 (ஆன்-ரோடு விலை சுமார் ரூ. 1,30,500).

முக்கிய சிறப்பம்சங்கள்:

இதில் 124.8சிசி எஞ்சின் உள்ளது. இதில் 'Eco' மற்றும் 'Power' என இரண்டு விதமான ரைடிங் மோடுகள் உண்டு. சிக்னலில் வண்டி நிற்கும் போது தானாகவே எஞ்சின் ஆஃப் ஆகி, நாம் ஆக்சிலரேட்டரைத் திருப்பினவுடன் வண்டி ஸ்டார்ட் ஆகும் புத்திசாலித்தனமான வசதியும் இதில் உள்ளது. இதன் டாப் மாடலில் வழியைத் தேட நேவிகேஷன் வசதியுடன் கூடிய கலர் ஸ்கிரீனும் கொடுக்கப்பட்டுள்ளது.