சென்னை : ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக கசிந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் நடித்துள்ள இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே இணையத்தில் வெளியாகியதால், தயாரிப்பு நிறுவனமான KVN Productions அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடம் முக்கிய விசாரணையின் அடிப்படையில், எடிட்டர் உமா சங்கர் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, தமக்கு இதய அறுவை சிகிச்சை செய்தும், படக்கசிவுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறி, தன்னை தவறாக சிக்கவைத்துள்ளதாக விளக்கமளித்து அவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள உமா சங்கருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், படம் கசிந்த பிறகு கைது நடவடிக்கையைத் தவிர்க்கவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
மறுபுறம், காவல்துறை தரப்பில் உமா சங்கர் படத்தை கசிந்ததற்கான போதிய ஆதாரங்கள் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி சி. குமரப்பன், தயாரிப்பு நிறுவனத்துக்கு இடையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் மேலதிக விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மீது திரையுலகத்தினரிடையே அதிக கவனம் நிலவுகிறது.
