போலி நம்பர்னா ஆம்புலன்ஸ் எப்படி ஓடும்? விமர்சனத்திற்கு பாலா பதிலடி?

என்னை வெளிநாட்டு கைக்கூலி என்பது அதிர்ச்சியளிக்கிறது என பாலா கூறியதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

kpy bala

சென்னை :விஜய் டிவி பிரபலம் பாலா தன்னால் முடிந்த அளவுக்கு பல உதவிகளை பலருக்கும் செய்து கொடுத்து வரும் நிலையில், அவர் வெளிநாட்டு கைக்கூலி என பத்திரிகையாளர் உமாபதி என்பவர் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தது பேசுபொருளாக வெடித்துள்ளது. இதனையடுத்து, ஒரு பக்கம் பாலா மீது விமர்சனமும் மற்றொரு பக்கம் அவருக்கு ஆதரவும் எழுந்துள்ளது.

விமர்சனங்கள் அதிகமாக எழுந்த காரணத்தால் இது குறித்து உடனடியாக பாலா பேசி விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக விளக்கம் இன்னும் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்திலோ அல்லது யூடியூப் மூலமாகவோ பேசவில்லை. KPY பாலா தனது கருத்துக்களை பத்திரிகையாளர் செய்யாறு பாலுவிடம் பகிர்ந்து கொண்டார். செய்யாறு பாலு அதனை தனது யூடியூப் சேனல் மூலம் தெரிவித்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் பாலா தன்னிடம் கூறியதாக செய்யாறு பாலு பேசுகையில் “என்னை வெளிநாட்டு கைக்கூலி என்பது அதிர்ச்சியளிக்கிறது. நான் வழங்கிய ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் சரியாக இயங்குகின்றன, அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. வாகனங்களின் நம்பர் மறைப்பது, பயனாளிகள் பெயருக்கு மாற்றுவதற்கு முன்பு அவர்களுடைய பாதுகாப்பு கருதி மட்டுமே. எனது உதவிகள் அனைத்தும் என் சொந்த வருமானத்தில் இருந்து செய்யப்படுகின்றன,” என்று பாலா தெரிவித்தார்.

பாலா மேலும் கூறுகையில் “நான் பெரிய மருத்துவமனை கட்டுவதாக சொல்லவில்லை, ஒரு சிறிய கிளினிக் அமைப்பதே என் திட்டம். ஒரு நாள் கூலி 850 ரூபாய், ஆனால் சாதாரண சிகிச்சைக்கு 1200 ரூபாய் செலவாகிறது. அதனால், நமது பகுதியில் கிளினிக் அமைக்க முடிவு செய்தேன். இதற்கு மருத்துவர், செவிலியர், பராமரிப்பு செலவுகளை நிகழ்ச்சிகளில் இருந்து சம்பாதித்து செலவிடுகிறேன்,” என்று கூறினார்.

உமாபதியின் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், “வெளிநாட்டு கைக்கூலி என்றால் என்னவென்று எனக்கே தெரியாது. நான் யூடியூப்பில் பணம் சம்பாதிக்கலாம், ஆனால் இன்ஸ்டாகிராமில் மட்டுமே உள்ளேன்,” என்று தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். மேலும், தொடர்ந்து அவர் கூறியதாக செய்யாறு கூறுகையில் ” நான் சம்பாதித்த பணத்தில் நான் ஒன்றரைக் கோடியில் கார் வாங்கி இருந்தால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள் எனவும், நான் வெளிப்படையாக உதவிகள் செய்வதால்தான் இப்படிப் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்ததாக அவர் கூறினார்.