கூலி படத்தில் என்னுடைய கதாபாத்திரம் இப்படி தான் இருக்கும்! மனம் திறந்த ஸ்ருதிஹாசன்!

கூலி படத்தில் நான் சத்யராஜ் மகளாக பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

coolie shruti haasan

சென்னை:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ‘கூலி’. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தில் நடித்த பிரபலங்கள் பேட்டிகளில் கலந்து கொண்டு படம் குறித்து பேசி வருகிறார்கள்.

அந்த வகையில், திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன் ஆகஸ்ட் 7, 2025 அன்று அளித்த பேட்டியில், தனது கதாபாத்திரம் குறித்து முதல்முறையாக வெளிப்படையாக பேசிய ரசிகர்களிடையே எழுந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ‘கூலி’ படத்தில் தனது பங்கு அறிவிக்கப்பட்டதும், சமூக ஊடகங்களில் தனது கதாபாத்திரம் கொலை செய்யப்படுமா அல்லது சண்டைக் காட்சிகளில் நடிப்பாரா என்று விவாதங்கள் எழுந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்ருதிஹாசன், ‘கூலி’ படத்தில் தனது கதாபாத்திரம் பிரீத்தி என்ற பெயரில், நடிகர் சத்யராஜின் மகளாக இருக்கும் என்று வெளிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இல்லை. பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன், இது ஒரு உணர்வுப்பூர்வமான பாத்திரம்,” என்று அவர் தெரிவித்தார். இந்த கதாபாத்திரம், பல பெண்களின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பதாகவும், கதையை முதலில் கேட்டபோது அதனுடன் உடனடியாக இணைந்து விட்டதாகவும் ஸ்ருதிஹாசன் கூறினார்.  அவருடைய இந்த விளக்கம், ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

‘கூலி’ படத்தின் கதை, ஒரு சமூகப் பின்னணியில் அமைந்துள்ளதாகவும், பல பெண்களின் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதாகவும் ஸ்ருதி குறிப்பிட்டார். “கதையை கேட்டவுடன், பல பெண்களின் அனுபவங்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடிந்தது. இது ஒரு தனித்துவமான பயணமாக இருக்கும்,” என்று அவர் பகிர்ந்து கொண்டார். லோகேஷ் கனகராஜின் பாணியில், ஆக்‌ஷன் மற்றும் உணர்ச்சி கலந்த கதையம்சம் இப்படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.