திருமணம், குழந்தைன்னு கதை கட்டுறாங்க- வதந்திகளுக்கு த்ரிஷா கடும் பதிலடி!

நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனாம். ஒரு பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து நேற்றுடன் இரண்டு வயதை எட்டிய 4 குழந்தைகளை வளர்க்கிறேனாம் என கிண்னடலாக த்ரிஷா கூறியுள்ளார்.

Hero Image

சென்னை : நடிகை த்ரிஷா குறித்து சமீப நாட்களாக திரைத்துறையில் பலவிதமான வதந்திகள் தீவிரமாகப் பரவி வந்தன. குறிப்பாக, அவர் சினிமாவில் இருந்து முழுமையாக விலகப் போவதாகவும், திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதாகவும் பல செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகரும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் இந்த வதந்திகள் குறித்து பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “த்ரிஷா விரைவில் சினிமாவில் இருந்து முழுமையாக விலகப் போவதாக திரைத்துறை வட்டாரத்தில் பலமாகப் பேசப்படுகிறது. பல முன்னணி தயாரிப்பாளர்கள் என்னிடம் நேரடியாகவே இந்த தகவலைப் பகிர்ந்துகொண்டனர். அவர் இனி புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்” என்று கூறினார்.

எனவே, இந்த செய்தி ஹாட் ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் வெடித்தது. இப்படியான சூழலில், அந்த தகவல்களை இன்னுமே உறுதிப்படுத்தும் விதமாக முன்னணி தெலுங்கு இயக்குநரின் பிரம்மாண்ட படத்தின் கதையை த்ரிஷா கேட்டுவிட்டு, அதில் நடிக்க மறுத்துவிட்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தாலும், அவர் எந்தப் புதிய திரைப்படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த வதந்தியான தகவலுக்கு த்ரிஷா விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் , அதே போலவே விளக்கம் அளித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு அதிரடி பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் மிகுந்த கிண்டலுடன் எழுதியிருந்தார்:“நான் திரைப்படங்களை விட்டு விலகிவிட்டேன், ஒரு பணக்கார தொழிலதிபரை மணந்துகொண்டேன், மேலும் நேற்று இரண்டு வயதை எட்டிய நான்கு குழந்தைகளை வளர்த்து வருகிறேன்.

நான் வேறு ஏதாவது சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய புனைக்கதையின் அளவை நாம் இதோடு உறுதி செய்து விட்டோமா?”இந்த பதிவு, த்ரிஷா மீது பரவும் வதந்திகளை கடுமையாக கிண்டல் செய்வதாக அமைந்துள்ளது. திருமணம், குழந்தைகள், சினிமாவில் இருந்து விலகல் போன்ற அனைத்து வதந்திகளையும் ஒரே பதிவில் அவர் மிக கூர்மையாக எதிரொலித்துள்ளார்.த்ரிஷாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. பலரும் த்ரிஷாவின் கிண்டலான பதிலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.