சென்னை :டிசம்பர் 5 அன்று இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, விமானிகள் மற்றும் கூட்டு பணியாளர் பற்றாக்குறை காரணமாக 1,000-க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்தது. புதிய விமானிகள் பணி நேரம் மற்றும் ஓய்வு விதிமுறைகள் (FDTL) அமலானதால் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை, டெல்லி, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் சேவைகளை முடக்கியது. டெல்லி விமான நிலையத்தில் இருந்து அனைத்து உள்நாட்டு விமானங்களும் முழு நாள் ரத்து; சென்னையில் 31 விமானங்கள் ரத்தாகின. இந்த ரத்துகள், பயணிகளை 3 நாட்கள் வரை விமான நிலையங்களில் தவிக்க வைத்துள்ளன. இண்டிகோ நிர்வாகம், “அமைப்பை மீண்டும் உருவாக்கும் பணியால் இது ஏற்பட்டது” என விளக்கியுள்ளது, ஆனால் விமானிகள் சங்கங்கள் “முன்னெச்சரிக்கை இன்றி திட்டமிடாததால்” என விமர்சித்துள்ளன.
டிசம்பர் 6 அதிகாலை 3 மணி முதல் சென்னை விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் இன்று இயங்குகின்றன. நேற்று (டிசம்பர் 5) மாலை 6 மணி வரை அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்தாக இருந்ததால், பயணிகள் பெரும் குழப்பத்தில் தவித்தனர். இன்று சேவைகள் மீட்சியடைந்தாலும், முழு அளவில் இயங்க 10-15 நாட்கள் ஆகலாம் என இண்டிகோ தெரிவித்துள்ளது. விமான நிலைய அதிகாரிகள், “பயணிகளுக்கு முழு ரீபோகிங், ஹோட்டல் தங்குமிடம், உணவு வழங்கப்படுகிறது” என அறிவித்துள்ளனர். இருப்பினும், ரத்து காரணமாக ஏற்பட்ட விமான டிக்கெட் விலை உயர்வு, பிற நிறுவனங்களில் 3-4 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்த ரத்துகள், ஆயிரக்கணக்கான பயணிகளை பாதித்துள்ளன. வெளிநாட்டு விமான நிறுவனங்களின் தேர்வு மற்றும் பண்டிகை சீசன் காரணமாக விமானிகள் பற்றாக்குறை ஏற்பட்டதாக விமானிகள் சங்கங்கள் கூறுகின்றன. பயணிகள், “ரூ.4,000 டிக்கெட்டுக்கு ரூ.80,000 வரை கேட்கிறார்கள்” என வேதனை தெரிவிக்கின்றனர். இந்த சூழலில், ரயில்வே தனது 37 ரயில்களில் 116 கூடுதல் பெட்டிகளை இணைத்து சேவை செய்கிறது. டெல்லி-வாரணாசி, டெல்லி-மும்பை போன்ற பிரபல வழித்தடங்களில் ரயில் டிக்கெட் தேவை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
இப்படியான சூழலில், மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திராஜா, வாரணாசி விமான நிலையத்தில் சிக்கியுள்ளார். “நம்பி வந்தோம். கடைசியில் இண்டிகோ பிளைட் திடீர்னு கேன்சல் பண்ணிட்டாங்க. நாங்கனாலும் பரவாயில்ல, வேற ஆப்ஷன் இருக்கு. சமாளிச்சிப்போம். இங்க நிறைய சீனியர் சிட்டிசன்ஸ் தான் இருக்காங்க. அவங்க என்ன பண்ணுவாங்களோ தெரில்ல. சரி வேற பிளைட்ல போகலாம்னு பாத்தா, ரூ.4,000 டிக்கெட் ரூ.80,000-னு போட்டுருக்காங்க” என அவர் வீடியோவில் வேதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம், சீனியர் குடிமக்களின் தவிப்பை வெளிப்படுத்துகிறது. இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ், “பயணிகளுக்கு வருத்தம்; டிசம்பர் 10-15 வரை சேவை மீட்சி” என வீடியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
