என் குருவை இழந்து தவிக்கிறேன்! பாரதிராஜா மறைவால் உடைந்த கவுண்டமணி, ரேவதி!

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்திற்குத் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

Hero Image

சென்னை : தமிழ் திரையுலகை ஸ்டூடியோக்களின் வெளிச்சத்தில் இருந்து மீட்டெடுத்து, கிராமத்து மண்ணின் வாசனையையும், மனிதர்களின் அசல் வாழ்வியலையும் திரையில் காட்டிய மாபெரும் கலைப் பேரரசர், 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா (வயது 84) இன்று அதிகாலை காலமானார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது. இந்தத் துயரச் செய்தி ஒட்டுமொத்த தமிழ்ப் திரையுலகையும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தில் சின்னசாமி என்ற இயற்பெயருடன் பிறந்து, சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தவர்.

1977-ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் படமான '16 வயதினிலே' தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றியமைத்தது. அதுவரை சென்னை ஸ்டூடியோக்களுக்குள் முடங்கிக் கிடந்த கேமராவை, கிராமத்து வயல்வெளிகளுக்கும், தெருக்களுக்கும் கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும். முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

பாரதிராஜா அவர்களின் இறுதிப் நாட்கள் மிகுந்த சோகத்தில் கழிந்ததாக அவரது குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அவரது அன்பு மகன் மனோஜ் காலமானார்.

மகனின் அந்தத் திடீர் பிரிவில் இருந்தே பாரதிராஜா அவர்களால் மீள முடியவில்லை. அந்தத் துயரமும் அதிர்ச்சியும் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து மோசமாக்கியது. அந்த சோகத்தின் பிடியிலிருந்தே இன்று அவரது உயிரும் பிரிந்துள்ளது என்பதுதான் ரசிகர்களை மேலும் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.

பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், புதிய வார்ப்புகள், கருத்தம்மா, மண்வாசனை, டிக் டிக் டிக் போன்ற படங்கள் என்றும் அழியாத காவியங்கள்.

இரங்கல்

முதல்வர் விஜய்

பாரதிராஜாவின் உடலுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய், நீலாங்கரை இல்லத்திற்கு நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த ஆறுதல்களைத் தெரிவித்தார்.

நடிகர் கவுண்டமணி உருக்கம்:

16 வயதினிலே படத்தின் மூலமாக எனக்கு இந்தத் திரையுலகில் ஒரு நிரந்தர முகவரியைக் கொடுத்தவர் என் அன்பு அண்ணன் பாரதிராஜா. அந்த மாபெரும் கலைஞனின் மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து கொள்கிறேன் என உருக்கமாக தெரிவித்தார்

நடிகை ரேவதி

பாரதிராஜா சார் அவர்களின் மறைவு என்னை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய, ஆன்மா சாந்தி அடையட்டும். நான் இன்று திரையுலகில் ஒரு நடிகையாக இந்த உன்னத நிலையில் இருப்பதற்கு அவரே முழு முதற்காரணம். என் குருவை இழந்து தவிக்கிறேன்" எனவும் சோகத்துடன் தெரிவித்தார்.

குஷ்பு இரங்கல்

நடிகை குஷ்பு தனது சமூக வலைதள பக்கங்களில் "இயக்குநர் பாரதிராஜா இனி நம்முடன் இல்லை என்பதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்குப் பேரிழப்பாகும். அவரது படங்கள் எப்போதுமே திரைக்கலையின் ஆகச்சிறந்த பள்ளியாக விளங்கும். உங்களை அதிகம் மிஸ் செய்கிறேன்" எனவும் கூறியுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக பொதுச்செயலாளர்)

"திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் தமிழ் திரையுலகிற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய பாரதிராஜா அவர்களின் மறைவு தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்." என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், பாரதிராஜாவின் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தின் விபரங்களையும், அரசு மரியாதை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

என் குருவை இழந்து தவிக்கிறேன்! பாரதிராஜா மறைவால் உடைந்த கவுண்டமணி, ரேவதி!