தமிழகத்தில் வெளியானது கூலி...திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய ரசிகர்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த "கூலி" திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியானது

coolie celebration

சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகளுடன் தொடங்கிய இப்படம், மும்பை, பெங்களூரு, கேரளா, மற்றும் ஆந்திராவில் காலை 6 மணி முதல் திரையிடப்பட்டு, ரசிகர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. திரையரங்குகளை ஆரவாரக் கூச்சல்கள், பட்டாசுகள், மற்றும் விசில் சத்தங்களுடன் திருவிழாக் கோலமாக மாற்றிய ரசிகர்கள், ‘கூலி’யின் வெளியீட்டை ஆடிப்பாடி கொண்டாடினர்.

படத்தில் ஆமிர் கான், நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாஹிர், மற்றும் ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத் இசையமைப்பில், 7,000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகிய இப்படம், முன்பதிவில் மட்டும் 55 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, கேரளாவில் ஒரு மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பைப் பிரதிபலித்தது.

மும்பையில், படத்தின் புரமோஷன் போஸ்டர்கள் ரயில்களை அலங்கரித்து, ரசிகர்களை உற்சாகப்படுத்தின. பெங்களூரில் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை 500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனையாகி, ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கேரளாவில் ஆஃப்லைன் முன்பதிவு தொடங்கியபோது, திரையரங்குகளுக்கு வெளியே ரசிகர்கள் வெள்ளமாகக் கூடினர். ஆந்திராவில், ரஜினியின் ரசிகர் பட்டாளம் கொடிகள் மற்றும் பட்டாசுகளுடன் திரையரங்குகளை திருவிழாக் களமாக மாற்றியது.

மற்ற மாநிலங்களில் வெளியாகி ரசிகர்கள் படத்தை கொண்டாடியது போல இப்போது படம் தமிழகத்திலும் வெளியாகியுள்ளது கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ரசிகர்கள் திரையரங்குகளில் கூட்டமாக கூடியுள்ளனர். படம் தொடங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு காட்சிகளையும் கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்து முடித்த பிறகு தமிழ் ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.