‘அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்கனா செருப்பால் அடிங்க’…நடிகர் விஷால் ஆவேசம்!
சென்னை : சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் கேட்பது யாராக இருந்தாலும் செருப்பால் அடியுங்கள் என விஷால் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசி புகார் அளித்து வருவது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சூழலில், தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடிகைகள் தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை பற்றி பேச தைரியமாக முன்வரவேண்டும் என தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார்.
அவரை தொடர்ந்து நடிகர் விஷால் மிகவும் ஆவேசத்துடன் ‘அட்ஜஸ்ட்மென்ட் கேட்டாங்கனா செருப்பால் அடிங்க’ என நடிகைகளுக்குத் தைரியம் கொடுக்கும் வகையில் அதிரடியாகப் பேசி இருக்கிறார். இன்று விஷால் தனது 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று சென்னை முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாடினார்.
உணவு வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஷாலிடம் மலையாள சினிமாவில் நடிகைக்கு எதிராக நடக்கும் பாலியல் சீண்டல்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த விஷால் “பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என நினைத்து இப்படிச் செய்கிறார்கள். யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும்” என்றார்.
தொடர்ந்த பேசிய அவர் அப்படி யாரவது அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் செருப்பால் அடியுங்கள் எனவும் ஆவேசமாக பேசினார். இது பற்றி பேசிய அவர் ” கேரளாவைப் போலத் தமிழ்நாட்டிலும் ஹேமா கமிட்டி போன்ற குழு இன்னும் சில நாட்களில் அமைக்கப்படும். நான் சொல்வது ஒரே ஒரு விஷயம் தான். அது என்னென்ன, யாராவது வந்து உங்களை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் அவர் யாராக இருந்தாலும் சரி, முதலில் அப்படிக் கேட்பவர்களைச் செருப்பால் அடியுங்கள்” எனக் கூறினார்.
மேலும், “தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக அது போன்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வருகிறது. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாகப் புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்” எனவும் விஷால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீ ரெட்டி உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்துப் பேசியிருந்தார் அதனைப் பற்றி நீங்கள் சொல்வதென்ன என செய்தியாளர்கள் கேட்க, அதற்கு பதில் அளித்த விஷால் ” நடிகை ஸ்ரீ ரெட்டி யார் என்றே எனக்குத் தெரியாது. அவர்கள் செய்த சேட்டை மட்டும் தான் எனக்குத் தெரியும். உண்மை தெரியாமல் என்னுடைய மீது குற்றம்சாட்டுவது தவறான ஒரு செயல்” எனவும் விஷால் தெரிவித்தார்.