இளைஞரை கூட விட்டு வைக்காத மலையாள இயக்குனர்.. பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு.!
பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வாலிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீது, மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோழிக்கோடு : பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குனர் ரஞ்சித் மீது கசாபா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் மற்றும் ஐடி சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது இவர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வழக்காகும்.
ஏற்கனவே, பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, கொச்சி நகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ரஞ்சித் மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அந்த இளைஞர் அளித்த புகாரின் படி, தான் பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தபோது, கோழிக்கோட்டில் மம்முட்டியின் ‘பவுட்டியுடே நாமத்தில்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது நடிக்க வாய்ப்பு கேட்டு இயக்குனர் ரஞ்சித்தை அணுகியதாகவும், அதன்பின் பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் வைத்து தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அந்த வாலிபர் கூறினார்.
இதன் அடிப்படையில், விசாரணைக் குழுவினர் சமீபத்தில் இளைஞரிடம் இருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். இந்த நிலையில், தான் கொடுத்த புகாரை வாபஸ் பெறுமாறு கூறி பலர் தன்னை போனில் அழைத்து கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். ஆனால், தன்னுடைய புகாரில் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியான பிறகு, ஒருவர் இளைஞர் பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளித்திருப்பது இதுவே முதல் முறை. முன்னதாக, பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கேரளா சலசித்ரா அகாடமியின் தலைவர் பதவியில் இருந்து ரஞ்சித் விலகியது குறிப்பிடத்தக்கது.