பாலியல் வழக்கு: கைது செய்யப்பட்ட நடிகர் எடவேல பாபு ஜாமீனில் விடுவிப்பு!

பாலியல் புகாரின் அடிப்படையில், எடவேல பாபுவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இன்று விசாரணை செய்தனர்.

Edavela Babu

கொச்சி:மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376 மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி எடவேல பாபுவுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில், அந்த நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், எடவேல பாபுவை சிறப்பு புலனாய்வுக் குழுவினர், இன்று கடலோர காவல்நிலைய தலைமையகத்தில் 3 மணி நேர விசாரணைக்குப் பிறகு, கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார் எர்ணாகுளம் பொது மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். சோதனைக்கு பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அவர் ஏற்கனவே எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றதால், விசாரணைக்கு பின்பு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டாதாக கூறப்படுகிறது. இதே பில், நேற்றைய தினம் எர்ணாகுளம் எஸ்பி ஜி பூங்குழலி ஐபிஎஸ் தலைமையிலான எஸ்ஐடி கொல்லம் எம்எல்ஏ முகேஷை கடலோர காவல்துறை தலைமையகத்தில் விசாரித்த பின்னர் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட அவரை எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக விசாரணைக் குழு அழைத்துச் சென்றது. பின்னர், ஜாமீனில் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.