எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ! அக்டோபர் 1 முதல் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம்!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) அக்டோபர் 1 முதல் 4 முறைக்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.

Hero Image

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது கோடி கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 1 முதல் வங்கியில் பணம் எடுக்கும் சேவை கட்டண விதிகளில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

இலவச வரம்பு

புதிய விதிமுறைகளின்படி, எஸ்பிஐ வங்கியின் அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே பணம் எடுக்கும் சேவை இலவசமாக வழங்கப்படும். சொந்த வங்கியின் ஏடிஎம் மையங்கள் அல்லது வங்கி கிளைகள் மூலம் மாதத்திற்கு மொத்தம் 4 முறை மட்டுமே இலவசமாகப் பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

புதிய கட்டணம்

மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள 4 இலவச வரம்புகளைத் தாண்டி செய்யப்படும் 5-வது பணப் பரிவர்த்தனையில் இருந்து ஒவ்வொரு முறை பணம் எடுக்கும்போதும் ரூ.15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி (GST) தொகைக் கட்டணமாகக் கணக்கில் இருந்து பிடிக்கப்படும். ஏடிஎம் மற்றும் வங்கி கிளை இரண்டிற்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 4 முறை மட்டுமே இலவசம் என வங்கி நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேபோல், ஆதார் எண் மூலம் பணம் எடுக்கும் ஏஇபிஎஸ் (AePS) பரிவர்த்தனைகளும் இந்த 4 இலவச வரம்பிற்குள் அடங்கும். 4 இலவச வரம்புகளைக் கடந்த பின் ஆதார் மூலம் பணம் எடுத்தாலும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாகப் பிடிக்கப்படும்.

டிஜிட்டல் சேவை

அதேவேளையில், கூகுள் பே, போன்பே, பேடிஎம் மற்றும் யோனோ (YONO) ஆப் போன்ற யுபிஐ (UPI), என்இஎஃப்டி (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) மற்றும் நெட் பேங்கிங் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் விதிக்கப்படவில்லை. டிஜிட்டல் முறை பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வழக்கம்போல் தொடர்ந்து 100% இலவசமாகவே செயல்படும்.

யாருக்கு பொருந்தும்

இந்தக் சேவை கட்டண மாற்றம் அனைத்து சாதாரண சேமிப்புக் கணக்குகளுக்கும் பொருந்தாது. குறிப்பாக BSBD (Basic Savings Bank Deposit Account) வகை கணக்குகளுக்கு மட்டுமே இந்த புதிய கட்டண முறை அமலுக்கு வருகிறது. எனவே எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு வகையை யோனோ (YONO) செயலி அல்லது அருகிலுள்ள வங்கி கிளையை அணுகி சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாடிக்கையாளர்கள் தங்கள் பணப் பரிவர்த்தனைகளுக்கு முடிந்தவரை கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த சேவை கட்டணப் பிடித்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். மேலும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தையும் தொடர்புகொள்ளலாம்.