இந்திய எலக்ட்ரிக் சந்தையை ஆக்கிரமிக்க வரும் ஜெட்டூர் டி2 மற்றும் ஜேக்கூ இவி கார்கள்!

இந்தியாவில் JSW மோட்டார்ஸ் மற்றும் செரி கூட்டணி வெளியிட உள்ள ஜெட்டூர் டி2 PHEV, ஐகார்-வி23 மற்றும் ஜேக்கூ இவி எஸ்யூவி கார்களின் விலை மற்றும் பேட்டரி விவரங்கள்.

Jetour T2 PHEV

டெல்லி:JSW மோட்டார்ஸ் நிறுவனம் செரி (Chery) ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி ஜெட்டூர் டி2, ஐகார்-வி23 மற்றும் ஜேக்கூ இவி ஆகிய மாடல்கள் விரைவில் களமிறக்கப்பட உள்ளன.

இந்த புதிய எஸ்யூவி கார்கள் வரும் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியச் சந்தையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2027 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இந்த கார்கள் முதல்முறையாகப் பொதுமக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்படலாம்.

ஜெட்டூர் டி2 பிளக்-இன் ஹைபிரிட் (Jetour T2)

முதலாவதாக அறிமுகமாக உள்ள ஜெட்டூர் டி2 மாடலானது, பிளக்-இன் ஹைபிரிட் (PHEV) தொழில்நுட்பத்துடன் வெளியாகும் கரடுமுரடான எஸ்யூவி ஆகும். இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 26.7 kWh பேட்டரி பேக் இணைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் இயங்கும் இக்கார், முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 1200 கிமீ வரை பயணிக்கும். இந்த மாடலின் விலை தோராயமாக 20 லட்சம் முதல் 45 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

ஐகார்-வி23 எலக்ட்ரிக் எஸ்யூவி (iCar-V23)

ஐகார்-வி23 மாடலானது முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவி காராக (BEV) தனித்துவமான வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் பாக்ஸி டிசைனில் (Boxy design) உருவாகியுள்ள இந்த காரில், 60 kWh முதல் 82 kWh வரையிலான பேட்டரி தேர்வுகள் வழங்கப்படும்.

சிறந்த ஆஃப்-ரோடு (Off-road) அனுபவத்திற்காக இக்காரில் ஆல்-வீல் டிரைவ் (AWD) தொழில்நுட்பமும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வருகை விலையானது சுமார் 18 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்க வாய்ப்புள்ளது.

ஜேக்கூ எலக்ட்ரிக் கார் (Jaecoo EV)

இறுதியாக, ஜேக்கூ இவி மாடலானது மிகவும் பிரீமியமான நடுத்தர அளவிலான எலக்ட்ரிக் எஸ்யூவி காராக இந்தியாவில் வெளியாகவுள்ளது. தோற்றத்தில் சிறிய ரேஞ்ச் ரோவர் (Range Rover) போல காட்சியளிக்கும் இதில் மேம்பட்ட லெவல்-2 ஏடாஸ் (ADAS) பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

இதில் பொருத்தப்பட உள்ள 60.9 kWh பேட்டரி மூலம், காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 461 கிமீ வரை பயணிக்கலாம். சந்தையில் இதன் விலை தோராயமாக 18 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய எலக்ட்ரிக் சந்தையை ஆக்கிரமிக்க வரும் ஜெட்டூர் டி2 மற்றும் ஜேக்கூ இவி கார்கள்!