டெல்லி : இந்தியச் சந்தையில் நாளுக்கு நாள் மின்சார இரு சக்கர வாகனங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் பலரும் இன்றயை காலத்தில் அதிகம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில், சாதாரண நடுத்தர மக்களும் எளிதில் வாங்கும் வகையில் குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 3 பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
க்ரீன் சன்னி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Green Sunny Electric Scooter)
விலை விவரம்: மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த ஆரம்ப நிலை ஸ்கூட்டரின் தோராயமான விலை ரூ. 30,499 ஆகும். குறைந்த பட்ஜெட் தான் உள்ளது அதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கவேண்டும் என விரும்புபவர்களுக்கு இது மிக சிறப்பான தேர்வு என்று சொல்லலாம்.
மைலேஜ் மற்றும் ரேஞ்ச்: ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 60 கி.மீ வரை பயணம் செய்ய முடியும். தினசரி வீட்டுத் தேவைகள், காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் வாங்க அருகில் உள்ள இடங்களுக்குச் செல்ல இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வேகம் மற்றும் உரிமம்: இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ ஆகும். இதுவொரு குறைந்த வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Low-speed scooter) என்பதால், இதனை ஓட்ட ஓட்டுநர் உரிமம் (Driving Licence) அல்லது ஆர்.டி.ஓ (RTO) பதிவு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொமாகி எக்ஸ்-ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Komaki X-One Electric Scooter)
விலை விவரம்: மிகச் சிறந்த கட்டமைப்புத் தரம் மற்றும் பணத்திற்கு ஏற்ற மதிப்புடன் (Value for money) வெளிவரும் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 34,999 முதல் ரூ. 36,499 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மைலேஜ் மற்றும் ரேஞ்ச்: வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் பேட்டரி வேரியண்ட்டைப் பொறுத்து, இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 60 கி.மீ முதல் 100 கி.மீ வரை மைலேஜ் வழங்கும். இதனால் தினமும் சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி பல நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
வேகம் மற்றும் பயனர் குறிப்பு: பாதுகாப்பான முறையில் மணிக்கு 25 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியது. க்ரீன் சன்னி ஸ்கூட்டரைப் போலவே இதற்கும் ஆர்.டி.ஓ விதிமுறைகள் எதுவும் கிடையாது என்பதால், கல்லூரி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.
யாகுவா ரூபி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Yakuza Rubie Electric Scooter)
விலை விவரம்: தோராயமாக ரூ. 38,080 விலையில் விற்பனை செய்யப்படுகின்ற இந்த ஸ்கூட்டர், ரிவர்ஸ் கியர் (Reverse gear), ஹில்-அசிஸ்ட் மற்றும் மொபைல் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட் (USB Port) போன்ற பல நவீன ப்ரீமியம் அம்சங்களுடன் வருகிறது.
மைலேஜ் மற்றும் ரேஞ்ச்: நாம் தேர்வு செய்யும் பேட்டரி வகை மற்றும் வண்டியில் ஏற்றப்படும் எடையைப் பொறுத்து, இது 45 கி.மீ முதல் 85 கி.மீ வரை நெகிழ்வான மைலேஜை வழங்குகிறது.
வேகம் மற்றும் சட்ட விதிகள்: இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ மட்டுமே. இதன் கட்டுப்படுத்தப்பட்ட வேக வரம்பு காரணமாக, இது போக்குவரத்துப் பதிவு மற்றும் உரிம விதிகளிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
