தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு, கோவை, கரூர், திருச்சி, குமரி ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரையிலும், சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 3-4 தினங்களில் மேற்கு திசையில் நகரக்கூடும்.
இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இலங்கை கடலோரம், தென்மேற்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது
