கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 503 ரன்களைக் குவித்துள்ளது. இதன்மூலம் வலுவான நிலையை இந்திய அணி எட்டியுள்ளது.
இலங்கையின் காலே நகரில் நேற்று (புதன்கிழமை) இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையேயான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இந்தியா.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய இந்தியா, முதல் நாள் ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 168 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன் 190 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
புஜாரா 247 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 144, ரஹானே 94 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 39 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்கள். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று 257 பந்துகளில் 150 ரன்கள் எடுத்தார் புஜாரா. தவன் தவறவிட்ட இரட்டைச் சதத்தை புஜாரா எடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பிரதீப் பந்துவீச்சில் 153 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ரஹானேவும் 57 ரன்களில் அவுட்டானார்.
அஸ்வினுக்கு இது 50-வது டெஸ்ட் போட்டி. அதனால் உற்சாகமாக களமிறங்கிய அஸ்வின் வேகமாக ரன்கள் குவித்தார். ஆனால், 47 ரன்களில் பிரதீப் பந்துவீச்சில் வெளியேறினார். ஓரளவு நல்ல தொடக்கம் கண்ட சாஹா, ஹராத் பந்துவீச்சில் 16 ரன்களில் மற்றும் ஜடேஜா 15 ரன்களில் பிரதீப் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.நல்ல முறையில் பாண்டியாவுடன் ரன் குவிப்பில் ஈடுபட்ட சாமி 30 ரன்களில் லஹிரு குமார் பந்தில் அவுட்டாகி வெளியேறினர் .
மதிய உணவு இடைவேளையின்போது இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் எடுத்துள்ளது. பாண்டியா 44, உமேஷ்யாதவ் ௦ ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இலங்கைத் தரப்பில் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது