பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) உடன் சாட் செய்ததில், உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இணையத்தின் மோகம் பெருகிவரும் நிலையில் செயற்கை நுண்ணறிவின் பேச்சை கேட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெல்ஜியத்தில் நிகழ்ந்துள்ளது. பெல்ஜியத்தைச் சேர்ந்த பியர் என்பவர், செயற்கை நுண்ணறிவான(AI) எலைசா(ELIZA) உடன் 6 வார காலத்தில் நடந்த உரையாடலுக்கு பிறகு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர் மனைவி, இந்த சேட் பாட் மட்டும் இல்லையென்றால் என் கணவர் உயிரோடு இருந்திருப்பார். காலநிலை மற்றும் சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்ட பியர், எலைசா(ELIZA) உடன் நடத்திய 6 வார உரையாடல்கள் அவரை தற்கொலைக்கு தூண்டியது என்று மேலும் கூறினார்.
எலைசா, பியரின் நம்பிக்கைக்கு உரியதாக மாறிவிட்டது, பகல் இரவு என முழு நேரமும் போதைப்பொருள் போல அதனுடன் சேட் செய்து கொண்டிருந்த பியர், தற்கொலை செய்து கொள்ளும் முன், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
பூமியைக் காப்பாற்ற, மனித குலத்தை பாதுகாக்க தன்னை கொல்லும் எண்ணத்தை, எலைசா பியரின் மனதில் விதைத்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. டிஜிட்டல் மயமாக்கலுக்கான மாநிலச் செயலர் மாத்தியூ மைக்கேல், இது குறித்து கூறும்போது ஒரு தீவிர முன்னுதாரணமான இது மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
செயற்கை நுண்ணறிவுகளுடன் இன்னும் நாம் வாழ கற்றுக்கொள்ளவில்லை, ஆனால் எந்தவொரு தொழில்நுட்பத்தின் பயன்பாடும், தங்களது பொறுப்பை தட்டி கழிக்கக்கூடாது என்று அவர் கூறினார்.