அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் இன்று அதிகாலை பிரம்மாண்டமாகத் தொடங்கிய 'பிஃபா உலகக்கோப்பை 2026' தொடரின் முதல் ஆட்டத்திலேயே (மெக்சிகோ vs தென்னாப்பிரிக்கா), இந்தியாவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ZEE5 செயலி பயங்கரமான தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துள்ளது. இதனால் மேட்ச்சை நேரலையாகப் பார்க்க முடியாமல் தவித்த இந்தியக் கால்பந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது குமுறல்களையும் வன்மத்தையும் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12:30 மணிக்கு மெக்சிகோ சிட்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க 'எஸ்டாடியோ அஸ்டேகா' மைதானத்தில் உலகக்கோப்பையின் தொடக்க ஆட்டம் கிக்-ஆஃப் (Kick-off) ஆன அதே சரியான நேரத்தில், ZEE5 ஆப் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளது (Crash).
ட்விட்டர் (X) மற்றும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் தங்களின் ஆதங்கங்களைப் பதிவிட்டு வருகின்றனர். "சரியாக மேட்ச் ஆரம்பிக்கும் போது ஆப் கிராஷ் ஆகிவிட்டது, ஒரு கால்பந்து போட்டியைப் பார்க்க நான் இந்த அளவுக்குக் கஷ்டப்பட்டதே இல்லை" என்றும், "பிஃபா உலகக்கோப்பையை 4K தரத்தில் ஒளிபரப்புவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆப்பில் Full HD (1080p) ஆப்ஷன் மட்டும்தான் இருக்கிறது, எப்போது 4K வரும்?" என்றும் நெட்டிசன்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தொழில்நுட்பக் கோளாறுகள் ஒருபுறமிருக்க, ZEE5 நிறுவனத்தின் பிஃபா உலகக்கோப்பைக்கான பிரத்யேக சப்ஸ்கிரிப்ஷன் கட்டணமும் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா மொத்தம் 39 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. ஆனால், ZEE5 நிறுவனம் இதற்கு 3 மாத கால வேலிடிட்டியுடன் ரூ.799 கட்டணமாக வசூலிக்கிறது."கடந்த முறை (2022-ல்) ஜியோ சினிமா ஆப்பில் ஒட்டுமொத்த உலகக்கோப்பையையும் இலவசமாகவும், தரமாகவும் ரசித்துப் பார்த்தோம். ஆனால், இந்த முறை 39 நாள் மேட்சுக்கு ரூ.799 வசூலிப்பது அநியாயம்; காசு வாங்கியும் ஆப் ஒழுங்காக வேலை செய்யவில்லை, இது ஒரு ஸ்கேம்" என ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
இதுமட்டுமன்றி, தொடக்கத்தில் பல சாதனங்களில் (Multiple Devices) பார்க்கலாம் என விளம்பரம் செய்துவிட்டு, சப்ஸ்கிரைப் செய்த பிறகு ஒரே ஒரு ஸ்கிரீனில் மட்டுமே பார்க்க முடியும் என ZEE5 விதிகளை மாற்றியதாகவும் புகார்கள் எழுந்தன. ஆனால், ஜூன் 11-க்கு முன்பே சப்ஸ்கிரைப் செய்த ஆரம்பகால பயனர்களுக்கு அந்த வசதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக ZEE5 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள ஸ்ட்ரீமிங் மற்றும் பஃபரிங் சிக்கல்களுக்கு ZEE5 உதவி மையம் (Help Centre) விளக்கம் அளித்துள்ளது. பயனர்கள் தங்களின் ஆப் கேச் (App Cache) தரவுகளை அழிக்கவும், செயலியை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் இன்ஸ்டால் செய்யுமாறும் அல்லது பிரவுசர்களை அப்டேட் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில்தான் 2034-ஆம் ஆண்டு வரையிலான பிஃபா தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்ப ZEE நிறுவனம் 8 ஆண்டுகால ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், முதல் மேட்ச்லயே நெட்டிசன்களிடம் மரண பங்கம் வாங்கியிருப்பது ZEE5 நிறுவனத்திற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மேலும், நேற்று நடைபெற்ற 2026 பிபா உலகக் கோப்பையின் தொடக்கப் போட்டியில் Mexico அணி, South Africa அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தனது உலகக் கோப்பை பயணத்தை தொடங்கியது. மெக்சிகோ அணிக்காக ஜூலியன் கினோனஸ் முதல் கோலையும், ரவுல் ஜிமெனெஸ் இரண்டாவது கோலையும் அடித்தனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியின் இரு வீரர்களும், மெக்சிகோ அணியின் ஒரு வீரரும் சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டனர். இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி குரூப் A புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
