பும்ராவையே பதறவிட்ட 15 வயது பையன்! இந்திய சீனியர் டீமுக்கு வர்றாரா வைபவ் சூர்யவன்ஷி?

வைபவ் சூர்யவன்ஷி அதிரடி ஃபார்மால், ஜூன் இறுதியில் நடக்கவிருக்கும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய சீனியர் அணியில் இவரை உடனே சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Hero Image

சென்னை : இந்திய கிரிக்கெட்டின் புதிய ரன் மெஷினாக உருவெடுத்துள்ள 15 வயது வைபவ் சூர்யவன்ஷி, இப்போதைய கிரிக்கெட் உலகில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளார். அண்டர்-19 உலகக் கோப்பையில் வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் விளாசி இந்தியாவுக்கு 6-வது உலகக் கோப்பையை வென்று கொடுத்த வைபவ், நடப்பு 2026 ஐபிஎல் தொடரிலும் அசுர வேட்டை நடத்தியுள்ளார்.

நடந்து முடிந்த 216 போட்டிகளில் 776 ரன்கள், அதுவும் 237.31 என்ற மிரட்டலான ரன் வேகத்தில் விளையாடி மிரட்டியுள்ளார். பும்ரா, ரபாடா, கம்மின்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்களைப் பதறவைத்து, இந்த ஒரே சீசனில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு புதிய சாதனை படைத்துள்ளார்.

இவரது இந்த ருத்ரதாண்டவ ஆட்டத்தால், இந்த மாத இறுதியில் நடக்கவிருக்கும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய சீனியர் அணியில் வைபவை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடம் அனல் பறக்கிறது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா பேசுகையில், "வைபவ் இந்திய கிரிக்கெட்டின் புதிய அதிசய சிறுவன்; எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டையே கலக்கப்போகும் திறமைசாலி. ஐபிஎல் போட்டிகளைத் தேர்வுக்குழுவினர் மைதானத்திற்கே வந்து நேரடியாகக் கவனித்துள்ளனர்.

அதனால் அவரது இந்த அசாத்திய ஆட்டம் யாருடைய கவனத்திலும் படாமல் போகாது. அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான அணி தேர்வின்போது, அவரது திறமையைக் கருத்தில் கொண்டு தேர்வுக்குழு சரியான முடிவை எடுக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு இப்படி ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்திருப்பது பெருமகிழ்ச்சி. மிக விரைவில் அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் முத்திரை பதிப்பார்" என அதிரடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 26 மற்றும் 28-ல் அயர்லாந்துக்கு எதிராகவும், தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்திய அணி மோதவுள்ள நிலையில், வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்திய சீனியர் அணி ஜெர்சி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.