மழையால் கைவிடப்பட்ட எலிமினேட்டர்! ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயர் 2-க்கு முன்னேறிய கோவை கிங்ஸ்

டிஎன்பிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் மழை குறுக்கிட்டதால், சிறந்த ரன் ரேட் அடிப்படையில் விடா கோவை கிங்ஸ் அணி குவாலிபயர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

tnpl eliminator

சென்னை:ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிஎன்பிஎல் (TNPL 2026) தொடரின் மிக முக்கியமான எலிமினேட்டர் (Eliminator) ஆட்டம் மழையால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு விடா கோவை கிங்ஸ் (Vida Kovai Kings) மற்றும் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் (IDream Tiruppur Tamizhans) அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

3 ஓவரில் நின்ற ஆட்டம்

இப்போட்டியில் டாஸ் வென்ற விடா கோவை கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்திருந்தபோது, சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியதால் நடுவர்கள் போட்டியை நிறுத்துவதாக அறிவித்தனர்.

இரவு வெகுநேரம் ஆகியும் மழை நிற்காததால், எலிமினேட்டர் போட்டி அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதிர்ஷ்டசாலியான கோவை அணி

போட்டி ரத்து செய்யப்பட்டதால், டிஎன்பிஎல் விதிமுறைகளின்படி லீக் சுற்றில் அதிக நெட் ரன் ரேட் (Net Run Rate) வைத்திருந்த அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என அறிவிக்கப்பட்டது.

விடா கோவை கிங்ஸ் அணி +1.638 என்ற சிறப்பான ரன் ரேட்டை வைத்திருந்ததால், அவர்கள் நேரடியாக குவாலிபயர் 2 (Qualifier 2) சுற்றுக்கு முன்னேறினர். மாறாக, -0.013 என்ற குறைவான ரன் ரேட்டை வைத்திருந்த திருப்பூர் தமிழன்ஸ் அணி துரதிர்ஷ்டவசமாகத் தொடரில் இருந்து வெளியேறியது.