SMAT 2025 : ரஹானே இருந்தும் மும்பைக்கு கேப்டனாகும் ஷர்துல் தாகூர்!

2025 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபியின் வரவிருக்கும் தொடரில் மும்பை அணியை ஷர்துல் தாக்கூர் வழிநடத்த உள்ளார்.

shardul thakur SMAT 2025

மும்பை :சையது முஷ்டாக் அலி டிராபி (SMAT) 2025-க்கான மும்பை அணியின் கேப்டனாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் அஜிங்க்யா ரஹானே, சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே போன்ற மூத்த மற்றும் இந்திய அணி வீரர்கள் இருந்தாலும், ஷர்துலுக்கே கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.

ஆனால் ஷ்ரேயஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயம் அடைந்து இந்த ஆண்டு முழுவதும் விளையாட முடியாத நிலையில் இருப்பதால், ஷர்துல் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.இந்த சீசனின் ரஞ்சி டிராபியில் ஏற்கனவே ஷர்துல் தாகூர் மும்பை அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையில் மும்பை, புதுச்சேரியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தற்போது எலைட் குரூப் டி-யில் முதலிடத்தில் உள்ளது. இந்த வெற்றிகரமான தலைமைத் திறன் காரணமாகவே SMAT-க்கும் அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.மும்பை அணி இந்த முறை மிக வலுவானது. சூர்யகுமார் யாதவ், அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, சர்பராஸ் கான், முஷீர் கான், சித்தேஷ் லாட் (இந்த ரஞ்சி சீசனில் 5 போட்டிகளில் 530 ரன்கள், 3 சதங்கள்), தனுஷ் கோடியன், ஷம்ஸ் முலானி, துஷார் தேஷ்பாண்டே போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.

விக்கெட் கீப்பர்களாக ஹர்திக் தாமோரே மற்றும் அங்க்ரிஷ் ரகுவன்ஷி (KKR வீரர்) உள்ளனர். இது தற்போதைய இந்திய டி20 அணியின் பல வீரர்களைக் கொண்ட மிகச் சக்திவாய்ந்த அணி.எலைட் குரூப் A-யில் இடம்பெற்றுள்ள மும்பை, நவம்பர் 26 அன்று ரயில்வேஸ் அணியுடன் தனது முதல் போட்டியைத் தொடங்குகிறது.

இதர அணிகள்: ஒடிசா, விதர்பா, கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர். இரண்டு முறை சாம்பியனான மும்பை, இந்த முறையும் பட்டம் தக்கவைக்க வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்குகிறது.ஷர்துல் தாகூரின் தலைமையில் மும்பை அணி புதிய உத்வேகத்துடன் களமிறங்குவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “அஜிங்க்யா, சூர்யா போன்ற மூத்த வீரர்கள் இருந்தாலும், ஷர்துலின் தலைமைத் திறனுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று மும்பை சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். SMAT 2025-ன் முதல் சுற்று நவம்பர் 26 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகிறது