கதறிய குஜராத்.. சாம்பியனான RCB! பைனலில் கிங் கோலியின் மரண மாஸ் ஆட்டம்!

அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி RCB கோப்பையை தக்கவைத்தது. பைனலில் விராட் கோலி 75* ரன்கள் குவித்து அபாரம்.

rcb virat kohli

அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆர்சிபி தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த பெங்களூரு அணி, தொடக்கத்திலிருந்தே குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தது. ஆர்சிபி பந்துவீச்சாளர் ரசிக் சலாம் தனது நேர்த்தியான பந்துவீச்சில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹேசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர் பொறுப்புடன் விளையாடி ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் (37 பந்துகள்) சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

156 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபிக்கு, வெங்கடேஷ் ஐயர் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அவர் 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி, வெறும் 25 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் இறுதிப்போட்டி வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்த புதிய சாதனையைப் படைத்தார். குஜராத் பந்துவீச்சாளர்களை எளிதாக எதிர்கொண்ட அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார்.

விராட் கோலியின் இந்த சிறப்பான ஆட்டத்தால், ஆர்சிபி அணி 18 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 161 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி இலக்கை அடைந்தது. எதிரணியின் சொந்த மண்ணிலேயே அவர்களை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியுள்ளதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.