HBHW vs ADSW : 'லீ'யின் சதத்தால் ஹோபார்ட் அணி அபாரம்! 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!

மகளிர் பிக்பாஷ் தொடரின் இன்றைய போட்டியில் ஹோபார்ட் அணி அடிலெய்டு அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

Hobart Hurricanes Women vs Adelaide Strikers Women

ஹோபார்ட் :விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிக்பாஷ் தொடரில் இன்று ஹோபார்ட் அணியும், அடிலெய்டு அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அடிலெய்டு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் களமிறங்கிய ஹோபார்ட் அணி முதலில் ஒரு விக்கெட்டை இழந்தாலும் அதன்பிறகு அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்தியது.

அதிலும், தொடக்க வீராங்கனையான ‘லீ’ அதிரடியின் உச்சத்தில் விளையாடினார். அவருடன் இணைந்து நிக்கோலா கேரியும் சிக்ஸர் பவுண்டரி என விளாசினார். இதனால், அந்த அணியின் ஸ்கோர் உச்சம் பெற்றது. சிறப்பாக விளையாடி வந்த லீ சதம் அடித்து அசத்தினார். மேலும், அவர் 59 பந்துக்கு 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, நிக்கோலா கேரியும் அரை சதம் கடந்து 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இறுதியில் 20 ஓவருக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. அடிலெய்டு அணியில் மேகன் ஷட் 1 விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். அதனைத் தொடர்ந்து, 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பேட்டிங் களமிறங்கியது அடிலெய்டு அணி.

தொடக்கத்தை நன்றாகத் தொடங்கிய ஹோபார்ட் அணி, போகப் போக விக்கெட்டை இழந்து சொதப்பியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான ஸ்ம்ரிதி மந்தனா நிதான ஆட்டத்தின் மூலம் ஸ்கோரை உயர்த்தினார். ஆனால், அது ஹோபார்ட் அணிக்குக் கைகொடுக்கவில்லை. சிறப்பாக விளையாடிய ஸ்மிருதியுடன் இணைந்து லாரா வோல்வார்ட்டும் அதிரடி காட்டினார்.

ஆனால், துரதிஷ்டவசமாக இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததால், அடிலெய்டு அணி தோல்வியின் விழும்புக்கு சென்றது. மேலும், ஹோபார்ட் அணியின் சிறப்பான பந்து வீச்சு, அந்த அணியின் வெற்றிக்கு மேலும் வலு சேர்த்தது. இதன் காரணமாக, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த அடிலெய்டு அணி வெறும் 163 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் ஹோபார்ட் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 8 புள்ளிகளுடன் ஹோபார்ட் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருந்து வருகிறது. அதே போலத் தோல்வியின் தாக்கத்தால் அடிலெய்டு அணி 2 புள்ளிகளுடன் கடைசி இடத்திலிருந்து வருகிறது.