கம்பீர் பணத்துக்கு ஆசைப்படுபவர் இல்லை - ஆதரவாக பேசிய பிரபல பயிற்சியாளர்!

கம்பீர் பயிற்சியாளராக 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்னர் 2026 ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கும் அணியை வழிநடத்தினார்.

Hero Image

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் அவருக்கு வலுவான ஆதரவு தெரிவித்துள்ளார்.முனாஃப் படேல், டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளார். அவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஸ்போர்ட்ஸ் பாட்காஸ்ட்டில் பேசுகையில்,“கௌதம் கம்பீர் பணத்தை விரும்புபவர் அல்ல, கிரிக்கெட்டை விரும்புபவர். அவரைப் போன்ற ஒரு பயிற்சியாளர் அகற்றப்பட்டால், அணியின் டிரஸ்ஸிங் ரூமில் ஒழுக்கம் பாதிக்கப்படும். நவீன கால கிரிக்கெட் வீரர்களை கட்டுப்படுத்தும் வலுவான ஆளுமை அவருக்கு மட்டுமே உள்ளது” என்று தெரிவித்தார்.

கம்பீர் இந்திய அணியை 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை ஆகிய இரண்டு ICC கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 2026 டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற முதல் ஆண்கள் அணியாக இந்தியா உருவெடுத்துள்ளது.

முனாஃப் மேலும் கூறுகையில்,“கம்பீர் உண்மையை நேரடியாகச் சொல்பவர். பலருக்கு இது பிடிக்காது. அவர் அணியின் கட்டுப்பாட்டை முழுமையாக வைத்திருக்கிறார். தவறு செய்தால் வீரர்களை டிராப் செய்யும் துணிச்சல் அவருக்கு உள்ளது. பயிற்சியாளர் நண்பராக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அமைப்பு கெட்டுவிடும். பயம் இருக்க வேண்டும்.கம்பீர் இந்தப் பணியில் எத்தனை எதிரிகளை உருவாக்கியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். கமெண்டரி பேனலில் 10 பேரில் 8 பேர் அவருக்கு எதிராக இருக்கிறார்கள். 5 செலக்டர்களில் 4 பேர் அவருக்கு எதிராக இருக்கலாம். ஆனாலும் அவர் தன் வேலையைச் செய்கிறார்” என்றார்.

ராகுல் டிராவிட் போன்ற ஐதீக பயிற்சியாளரைத் தொடர்ந்து கம்பீர் பொறுப்பேற்றபோது பெரும் சவாலை எதிர்கொண்டார். ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சாம்பியனாக்கிய அனுபவம் அவருக்கு பெரும் உதவியாக இருந்தது என்று முனாஃப் சுட்டிக்காட்டினார்.

கம்பீர் தற்போது இந்திய அணியை வழிநடத்தும் விதம் மற்றும் அவரது கடுமையான அணுகுமுறை குறித்து விவாதங்கள் தொடர்ந்து வரும் நிலையில், முனாஃப் படேலின் இந்த ஆதரவு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் கம்பீரின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் நிலவும் நிலையில், முனாஃப் போன்ற முன்னாள் வீரர்களின் ஆதரவு அவருக்கு பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.