ஐபிஎல் 2026-இல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் இளம் பேட்ஸ்மேன் முகுல் சௌதரி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான த்ரில் வெற்றியில் ஆட்டநாயகனாகத் திகழ்ந்த பிறகு, தனது ரோல் மாடலான எம்.எஸ். தோனி பற்றி உணர்ச்சிபூர்வமாகப் பேசியுள்ளார்.ஏப்ரல் 9 அன்று ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற போட்டியில், 182 ரன்கள் இலக்கைத் துரத்திய லக்னோ அணி 16-வது ஓவர் முடிவில் 128/7 என்ற சோகமான நிலையில் இருந்தது.
அப்போது களமிறங்கிய 21 வயதான முகுல் சௌதரி, 27 பந்துகளில் 54 ரன்கள் (2 பவுண்டரி, 7 சிக்ஸர்) அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடைசி பந்தில் ஒரு பை ரன் எடுத்து LSG 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட வீடியோவில் முகுல் சௌதரி பேசுகையில்,“நான் எப்போதும் எம்.எஸ். தோனியைப் பார்த்து வளர்ந்தவன். நானும் ஒரு கீப்பர் என்பதால் அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை ரொம்பவே ரசித்து வருகிறேன். 2011 உலகக் கோப்பை என் மனதில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த ஷாட்டைப் பார்த்து நானும் பயிற்சி செய்து வருகிறேன்” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது:“தோனி எனக்கு எப்போதும் ரோல் மாடல். நானும் ஒரு ஃபினிஷராக இருக்க விரும்புகிறேன். அவரைப் போலவே ஆட்டத்தை முடித்து வெற்றி பெற வேண்டும் என்பதே எனது இலக்கு. அதனால்தான் அவரை எனது ரோல் மாடலாகப் பின்பற்றுகிறேன்” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார்.இந்தப் போட்டியில் முகுல் சௌதரி 17-வது ஓவரில் ஒரு ஹெலிகாப்டர் ஷாட்டையும் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
அந்த ஷாட் லாங்-ஆனுக்கு அப்பால் சென்று விழுந்தது.இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து 9-வது இடத்தில் தொடர்கிறது.முகுல் சௌதரியின் அதிரடியான ஆட்டம் மற்றும் தோனியின் மீதான அவரது பெரும் பற்று, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
