ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆகும் ஆயுஷ் படோனி...யார் இவர்?

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகிய நிலையில், அவருக்கு மாற்றாக ஆயுஷ் பதோனி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Ayush Patoni

டெல்லி :வாஷிங்டன் சுந்தரின் காயம் காரணமாக, நியூசிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் ஆயுஷ் படோனி (Ayush Badoni) சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த 26 வயதான இவர் இதுவரை இந்திய அணியில் விளையாடாத அன்கேப்ப்ட் ஆல்-ரவுண்டர் ஆவார். வாஷிங்டன் சுந்தர் வடோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது இடது பக்க விலா எலும்பில் காயம் அடைந்து வெளியேறினார்.

அவர் மீதமுள்ள இரு போட்டிகளிலும் விளையாட முடியாது என்று பிசிசிஐ அறிவித்தது.ஆயுஷ் படோனி முதன்மையாக பேட்ஸ்மேனாகவும், ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சாளராகவும் செயல்படுபவர். டெல்லி அணியை கேப்டனாக வழிநடத்திய அனுபவம் கொண்டவர். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் ரிஷப் பண்டின் துணை கேப்டனாக இருந்தார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடியவர்.

முதல் தர கிரிக்கெட்டில் (First Class) 57.96 சராசரியுடன் பேட்டிங் செய்துள்ளார்.ஆயுஷ் படோனி டெல்லி அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் ஆல்-ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். டெல்லி பயிற்சியாளர் சரந்தீப் சிங் கூறுகையில், “கடந்த ஒரு வருடமாக அவர் ஒவ்வொரு பயிற்சியிலும் குறைந்தது 30 பந்துகளாவது ஆஃப்-ஸ்பின் வீசுகிறார். அவர் தனது ஆஃப்-ஸ்பின் திறனை மேம்படுத்த வேண்டும் என்று உணர்ந்து கடுமையாக உழைத்து வருகிறார். இந்திய அணியில் ஆல்-ரவுண்டராக இடம் பிடிக்க இது அவசியம் என்று அவர் அறிந்துள்ளார்” என்றார்.

படோனியின் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சு கடுமையான டர்ன் மற்றும் கர்ரம் பால், ஆர்ம் பால் ஆகியவற்றை கொண்டுள்ளது என்று சரந்தீப் சிங் புகழ்ந்தார். அவர் ஒரு புத்திசாலி கிரிக்கெட் வீரர், விரைவாக கற்றுக்கொள்பவர் என்றும் கூறினார். இப்போது ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு அணியுடன் இணைவார். இது அவரது இந்திய அணி அறிமுகமாக இருக்கலாம். இந்தத் தொடரில் இந்திய அணி ஏற்கனவே மூன்று முக்கிய வீரர்களை காயம் காரணமாக இழந்துள்ளது.

ரிஷப் பண்ட் (பக்க வலி), டிலக் வர்மா (க்ரோயின் அறுவை சிகிச்சை), வாஷிங்டன் சுந்தர் (விலா எலும்பு காயம்) ஆகியோர் வெளியேறியுள்ளனர். சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இப்போது ஆயுஷ் படோனியை சேர்த்து அடுத்த போட்டிக்கு தயாராகி வருகிறது. ராஜ்கோட் போட்டி வருகின்ற ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.