ஆஸ்ரேலியா :ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) வெறும் இரண்டு நாட்களில் முடிந்தது. இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த குறுகிய போட்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு (CA) சுமார் £5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.60.6 கோடி) நிதி இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
MCG-யில் முதல் இரு நாட்களும் ரசிகர்கள் முழு அளவில் கூடினர். மூன்றாவது நாள் டிக்கெட்டுகளும் முழுமையாக விற்பனையான நிலையில், போட்டி முடிந்ததால் அந்த நாள் வருவாய் முழுமையாக இழப்பாகியது. இது ஆஷஸ் வரலாற்றில் நான்காவது குறுகிய டெஸ்ட் போட்டியாக (852 பந்துகள் மட்டுமே) பதிவாகியுள்ளது. முதல் நாள் 20 விக்கெட்டுகள் விழுந்தது போட்டியை விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தது.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாகி டாட் கிரீன்பெர்க், “குறுகிய டெஸ்ட் போட்டிகள் வியாபாரத்துக்கு நல்லது இல்லை” என்று தெரிவித்தார். பந்தும் பேட்டும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், பிட்ச் தயாரிப்பில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா மேலும் தலையிட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார். இதுவரை மைதான ஊழியர்களிடம் விட்டிருந்த பிட்ச் தயாரிப்பில் மாற்றம் தேவை என்று அவர் கூறினார்.போட்டியில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 46 ரன்களுடன் அதிகபட்சமாக அடித்தார்.
இங்கிலாந்து 175 ரன்கள் இலக்கை 4 விக்கெட் இழப்புக்கு எட்டியது. ஓப்பனர்கள் ஜாக் கிராலி, பென் டக்கெட் வேகமான தொடக்கம் அளித்தனர். ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டுகள் விழுந்த போதிலும், ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் இறுதிவரை நிலைத்து வெற்றியை உறுதி செய்தனர்.இதே தொடரின் முதல் டெஸ்டும் இரண்டு நாட்களில் முடிந்து பெர்த் மைதானத்துக்கு £1.5 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியது. இந்த இரு போட்டிகளும் குறுகிய நாட்களில் முடிந்தது கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நிதி சுமையாக அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் நீண்ட நாட்கள் நீடிக்க வேண்டும் என்று ரசிகர்களும் நிர்வாகமும் விரும்புகின்றனர். இந்த இழப்புகள் டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளன.
