அதிரடி ஆட்டம் 152*! வரலாற்று சாதனை படைத்த கே.எல்.ராகுல்!

ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 6 சதங்களுடன் கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்து ராகுல் அசத்தியுள்ளார்.

Hero Image

டெல்லி : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீரரான கேஎல் ராகுல், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அருண் ஜைட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், ராகுல் சதமடித்து மட்டுமல்லாமல், 152 ரன்கள் (ஆட்டமிழக்காமல்) குவித்து, ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர்களில் அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோரைப் பதிவு செய்தார்.

இதற்கு முன்பு இந்தச் சாதனையை அபிஷேக் சர்மா வைத்திருந்தார். அவர் 2025ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 141 ரன்கள் அடித்திருந்தார். ராகுலின் 152 ரன்கள் இப்போது இந்திய வீரர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் ராகுல் மூன்றாவது இடத்தில் உள்ளார். முதல் இரு இடங்களை கிறிஸ் கெயில் (175*) மற்றும் பிரெண்டன் மெக்கல்லம் (158*) ஆகியோர் வகிக்கின்றனர்.

போட்டியின் தொடக்கம் ராகுலுக்கு சாதகமாக இல்லை. மூன்றாவது ஓவரில் அவர் புல் ஷாட் ஆட முயன்றபோது, பந்து டீப் ஸ்கொயர் லெக்கில் நின்ற ஷாஷாங்க் சிங்கிடம் சென்றது. ஆனால் ஷாஷாங்க் அந்த எளிய கேட்சை விட்டுவிட்டார். இந்த அதிர்ஷ்டத்தை ராகுல் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்.அதன் பிறகு அவர் அதிரடியாக ஆடத் தொடங்கினார். 66 பந்துகளில் 150 ரன்களை எட்டினார்.

இறுதியில் 152 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு சிறந்த துணையாக நிதீஷ் ராணா 44 பந்துகளில் 91 ரன்கள் அடித்து அசத்தினார். இருவரும் இணைந்து அணிக்கு மிகப் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.இந்த அபாரமான ஆட்டத்தின் மூலம் கேஎல் ராகுல் ஐபிஎல் வரலாற்றில் தனது பெயரை பொன் எழுத்துக்களால் பதிவு செய்துள்ளார்.

மேலும், இந்த சாதனைமட்டுமின்றி கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த (6) 3வது வீரர் என்ற கிறிஸ் கெயில் சாதனையை சமன் செய்தார். ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகள் (16) அடித்த 2வது வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.