தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றியமைக்கலாம் என்ற வகையிலான தமிழக அரசின் சட்ட திருத்தத்திற்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தொழிற்சாலை சட்ட திருத்தம் 65-ஏ பிரிவில் திருத்தம் செய்யும் சட்ட வரையறையை தமிழக அரசு தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்தது. இதன் மூலம் தொழிலாளர்களின் பணிநேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணிநேரமாக மாற்றும் நடைமுறை வரலாம் என கூறப்படுகிறது. இதன் மீதான விவாதம் இன்று நடைபெற்ற போது, சட்டபேரவையில் கடும் எதிர்ப்பு எழும்பியது.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவுக்கு சட்டமன்றத்தில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி என பலரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த சட்ட வரையறையை சட்டமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாகை மாலி வலியுறுத்தினார்.
திமுக கொண்டு வந்த சட்ட வரையறையினை திமுக கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு குரல்களை பதிவு செய்து எதிர்த்து வருகின்றனர். இது தொழிலாளர்கள் உரிமை சார்ந்த கோரிக்கை எனவும், இந்த சட்ட வரையறை தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் இருக்கிறது என பிரதான கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
இந்த சட்டம் அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தாது. எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு இது பொருந்தும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். இந்த சட்டம் எந்த வகையிலும் தொழிலாளர்களை பாதிக்காது என அமைச்சர் கணேசணும் சட்டப்பேரவையில் உறுதியளித்தார்.