மேகதாது விவகாரத்தை அண்ணாமலை அரசியலாக்க பார்க்கிறார் என திருமாவளவன் பேசினார்.
பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகளின் கூட்டமானது ஏற்கனவே பீகார் பாட்னாவில் நடைபெற்றது. அடுத்ததாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் பல்வேறு இடங்களில் நடைபெறும் என கூறப்படும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க வேண்டும். இது எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த கூட்டம் பெங்களூருவில் நடைபெறுவதால் அதில் பங்கேற்பதில் எந்த தவறும் இல்லை என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் என்பது வேறு. மேகதாது அணை கட்டும் விவகாரம் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாக எண்ணிக் கொள்ள வேண்டாம். இதனை வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் அரசியல் செய்து வருகின்றனர் எனவும் திருமாவளவன் விமர்சித்து உள்ளார்.
