ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு குறிப்பிட்ட தேதிக்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகள் ஒற்றை நீதிபதி அமர்வு முன் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் இரண்டு நீதிபதி அமர்வுக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதிமுக செயற்குழு :
இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. இதற்கிடையில் ஏப்ரல் 16ஆம் தேதியன்று தற்போது அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு நடைபெற உள்ளது.
ஓபிஎஸ் கோரிக்கை :
இந்த செயற்குழுவை காரணம் காட்டி, தனது வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது நாளை மறுநாள் ஏப்ரல் 12ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
செயற்குழுவுக்கு இடையூறு :
ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு விசாரணை நாளை மறுநாள் வரவுள்ளதால், அப்போது இபிஎஸ்க்கு எதிராக உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்பட்டால் அது ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறும் செயற்குழுவுக்கு இடையூறாக இருக்கும் என கூறப்படுகிறது. ஏற்கனவே செயற்குழு கூட்டம் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.