அரசு பங்களாவை காலி செய்துவிட்டு பேசிய ராகுல் காந்தி, உண்மையைப் பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
கடந்த 2019 தேர்தலின் போது தேர்தல் பரப்புரையில் மோடி பெயர் குறித்து, அவதூறாக பேசிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது மற்றும் அவரது, எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவர் தங்கியிருந்த அரசு பங்களாவையும் காலி செய்யுமாறு கூறப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் காந்தி தான் 19 ஆண்டுகளாக தங்கியிருந்த, அதிகாரப்பூர்வ அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சாவியை வழங்கினார். அதன்பிறகு பேசிய ராகுல் காந்தி, இந்திய மக்கள் இந்த வீட்டை 19 ஆண்டுகளாக தங்கியிருக்க எனக்குக் கொடுத்தார்கள், அவர்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதற்கான விலை இது. உண்மையைப் பேசுவதற்கு நான் எந்த விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த ராகுலின் சகோதரி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி உண்மையைப் பேசியதால் அவதிப்படுவதாகக் கூறினார். ஆனால் நாங்கள் பயப்படவில்லை. அவர் எந்த அரசாங்கத்திற்காக கஷ்டப்படுகிறாரோ அந்த அரசாங்கத்தைப் பற்றி அவர் உண்மையைப் பேசினார் என்று பிரியங்கா காந்தி கூறினார்.