ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த நிலையில், ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து, சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
முன்னதாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை, தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் இதனை ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியிருந்தார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் இந்த ஆன்லைன் தடை சட்டமசோதா, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
மேலும் இன்று சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இந்த நிலையில் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆன்லைன் தடை சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து ஆளுநர் ஒப்புதல் வழங்கிய, இந்த மகிச்சியான செய்தியை சட்டப்பேரவையில் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இந்த தடை சட்டம் இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என அறிவித்தார்.