ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சட்டத்தை மீறினால் கடுமையாக தண்டனை.
முதன்முறை நிறைவேற்றம்:தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு உடைமைகள் மற்றும் உயிரை மாய்த்துக்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து, வேதனை தரும் வேளையில் இதனை தடை செய்யக்கோரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது.
இழுபறி:இந்த மசோதாவிற்கு விளக்கம் கேட்டு ஆளுநர் இதனை ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியிருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த இந்த ஆன்லைன் தடை சட்டமசோதா, கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஆளுநர், சமீபத்தில் ராஜபவனில் மாணவர்களுடன் நடந்த உரையாடலின் போது, மசோதா நீண்ட நாட்களாக ஒப்புதல் அளிக்கப்படமால் இருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டுவந்தார். இந்த நிலையில் தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்த ஆன்லைன் தடை சட்டமசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
தண்டனை:இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டப்படி, இனி தடையை மீறி சூதாட்டம் விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை அல்லது 5000 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூதாட்ட விளையாட்டு குறித்த விளம்பரம் செய்வோருக்கு 5 லட்சம் அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.