தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசிய ஆளுநர் ரவிக்கு மதிமுக தலைவர் வைகோ கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
உதகையில் நடைபெற்ற துணைவேந்தர்கள் விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து பேசியிருந்தார். அதில், வெளிநாட்டு தொழிலதிபர்களை சந்தித்தால் மட்டும் முதலீடு செய்ய மாட்டார்கள். அதற்கான சூழலை இங்கு உருவாக்க வேண்டும். இங்கு இளைஞர் கல்விக்கேற்ற வேலை கிடைப்பது இல்லை என ஆளுநர் ரவி பேசியிருந்தார்.
ஆளுநரின் பேச்சுக்கு பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். மதிமுக கட்சி தலைவர் வைகோ தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், ஆளுநரின் செயல்பாடுகளும் பேச்சுகளும் எல்லை மீறி போய்க்கொண்டு இருக்கிறது என பதிவிட்டார்.
மேலும், முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து விஷமத்தனமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு பயணத்தை இழிவுபடுத்தியுள்ளார். தமிழ் மக்களின் முதல் விரோதியாக இருக்கும் ஆளுநர் ரவியை வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் நாகாலாந்தில் ஆளுநரை மக்கள் விரட்டியடித்தது போல விரட்டி அடிக்கப்படுவார் என தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்துள்ளார் மதிமுக தலைவர் வைகோ.
