சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது, இதில் இந்து சமய அறநிலையத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சேகர்பாபு, உரையாற்றிவந்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
கோயில் பணிகள்:
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த 50 கோடி ரூபாய் வழங்கப்படும். மதுரை அழகர் கோயிலில் 5.50 கோடி ரூபாய் மதிப்பில் பராமரத்து பணிகள் மேற்கொள்ளப்படும். மதுரை கள்ளழகர் கோயில்- சோலை மலை வரை பக்தர்கள் பயணம் செய்வதற்கு, 4 புதிய சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்படும்.
ஓய்வூதியம் உயர்வு:
இந்தாண்டு முதல் கோயில் பணியாளர் குடும்ப ஓய்வூதியம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். ஓய்வூதியதாரர்கள் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் ஓய்வூதியமும் உயர்த்தப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
ஆன்மிக பயணம்:
ராமேஸ்வரத்திலிருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக, 200 பேர்இந்த ஆன்மிக பயணத்திட்டத்தில் அழைத்துச் செல்லப்படுகின்றனர் எனவும், மத்திய அரசு இந்த திட்டத்தினை அறிவிப்பதற்கு முன்பே, மாநில அரசு இத்திட்டத்தினை அறிவித்துவிட்டது எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மானசரோவர் தலத்திற்கு முதல் முறையாக ஆன்மீக பயணம் செல்லும் 500 பக்தர்களுக்கு, அரசு மானியம் தலா ரூ.50,000 ஆக அதிகரிப்பு, மற்றும் முக்திநாத் செல்லும் 500 பக்தர்களுக்கு அரசு மானியம் தலா ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார்.