ராகுல் காந்தி வழக்கில் அரசு தலையிட்டு நீதிபதியை மாற்றி தீர்ப்பு வழங்க வைத்துள்ளார்கள் என திருமாவளவன் பேச்சு.
ராகுல்காந்திக்கு, சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ராகுல் காந்தியை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சியினரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மோடி அரசாங்கம், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் பயப்படுகிறது என்று கூறியிருந்தார்.
முன்னதாக கர்நாடகாவின் கோலாரில் 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து, ராகுல்காந்திக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதற்கு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் எம்.பி பதவியிலிருந்து தொகுத்து நீக்கம் குறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, பாஜக அரசின் தலையீட்டால் தான் ராகுலுக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அரசு இந்த வழக்கில் தலையிட்டு நீதிபதியை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏதுவான ஒரு நீதிபதியை வைத்து சிறை தண்டனை வழங்க வைத்துள்ளார்கள். எதிர்க்கட்சிகள் இல்லாத தேர்தலை சந்திக்க இந்த அரசியல் சதியை செய்துள்ளார்கள். தேர்தலை சந்திக்க அஞ்சும் பாஜக அரசு, எதிர்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்க, காங்கிரஸை பலவீனப்படுத்த மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம் என திருமாவளவன் மேலும் கூறினார்.
unknown node