பெட்ரோல் மற்றும் டீசல்,ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்..!

Central Petroleum and Natural Gas Minister Dharmendra Pradhan has said that petrol and diesel should be brought within the GST limit

பெட்ரோல் மற்றும் டீசல்,ஜி.எஸ்.டி.வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.

ஆனால்,இதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக குஜராத் அரசு மற்றும் ஐ.ஓ.சி. இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு நேற்று காந்திநகரில் நடைபெற்றது.

அதில்,மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துக் கொண்டார்.

அதன்பின்னர்,எரிபொருள் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர்  கூறியதாவது:

பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்,சமீபத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 டாலர்களுக்கு மேல் அதிகரித்ததே ஆகும்.மேலும்,நாம் நமது எண்ணெய் தேவையில் 80 சதவீதம் வரை இறக்குமதி செய்வதால், சர்வதேச விலை உயர்வு நம்முடைய நுகர்வோருக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது,சர்வதேச சந்தையால் கட்டுப்படுத்தப்படுகிறது.இருப்பினும்,பெட்ரோலும்,டீசலும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது எனது கருத்தாக உள்ளது.ஆனால்,இதுகுறித்து ஜி.எஸ்.டி. கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும்”,என்று தெரிவித்தார்.