ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம், தேசிய அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குஜராத் தேர்தலில் 5 இடங்களைப்பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் என்சிபி(தேசியவாத காங்கிரஸ்), சிபிஐ(இந்திய கம்யூனிஸ்ட்) ஆகிய கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்தை தேர்தல் ஆணையம் (EC) திரும்பப் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கட்சிகளுக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்குகிறது. மக்களவை அல்லது மாநில சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் ஏதேனும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில், குறைந்தது 6 சதவீத செல்லுபடியாகும் வாக்குகளைப் பெறவேண்டும்.
மாநிலங்களில் இருந்து லோக்சபாவில் குறைந்தபட்சம் 4 இடங்களையாவது கட்சி வெல்ல வேண்டும். மூன்று வெவ்வேறு மாநிலங்களில் இருந்து லோக்சபாவில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களை (அதாவது குறைந்தபட்சம் 11 இடங்கள்) கட்சி வெல்ல வேண்டும். கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
என்சிபி(தேசியவாத காங்கிரஸ்), கடந்த 2000 இல் ஒரு தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ்க்கு 2016 இல் தேசிய அந்தஸ்து வழங்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி, அருணாச்சல பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
இருப்பினும், 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களின் போது அருணாச்சலப் பிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் அங்கீகாரம் வழங்குவதற்கான நிபந்தனைகளை சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பூர்த்தி செய்யவில்லை என்று தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.