சென்னை : அமைச்சர் கில்லி சரத் போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சமூக வலைதளங்களில் பரவிய பழைய ஐபிஎல் (IPL) மைதான வீடியோ, தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் போதை ஒழிப்பு தினத்தை முன்னட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்குச் காலையில் சென்று வந்த பிறகு, தனக்கு எதிராக இத்தகைய தவறான வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருவதாக அமைச்சர் கில்லி சரத் வீடியோ மூலம் கண்டனமும் விளக்கமும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து அமைச்சர் கில்லி சரத் பேசுகையில், "சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்காக மைதானத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது தங்களது குழந்தை மாத்திரையை முழுங்காமல் துப்பிவிடுவதால், அவளுக்குக் கொடுப்பதற்காக எனது மனைவி ஒரு மாத்திரையைத் தூளாக அரைத்து (Crush) தண்ணீரில் கலந்து கொடுக்க முயன்றார். அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவைத்தான் தற்பொழுது தவறான முறையில் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
இருப்பினும், அமைச்சரின் இந்த விளக்கம் ஒருபுறமிருக்க, இந்த விவகாரம் தவெக தலைமைக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சர்ச்சையால் கடும் அதிர்ச்சியடைந்த முதல்வர் புஸ்ஸி ஆனந்த், அமைச்சர் கில்லி சரத்தை நேரில் அழைத்து மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் பயந்துபோன அமைச்சர் சரத், முதல்வர் புஸ்ஸி ஆனந்தைச் சந்தித்து, "தான் விளையாட்டாகச் செய்ததை தற்பொழுது அரசியலாக்குகிறார்கள்" என்று வருத்தப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு முதல்வர் தரப்பில் "தளபதி (விஜய்) எடுப்பதே இறுதி முடிவு" எனக் கறாராகக் கூறப்பட்டதோடு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் சரத்துக்குக் தற்பொழுது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தீவிரமாக அரசியலாக்கி வருவதால், உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தவறை ஒப்புக்கொண்டது போலாகிவிடும் எனத் தவெக சீனியர்கள் கருதுகின்றனர். எனவே, தற்போதைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல் இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் கழித்து நடக்கவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தின்போது, அமைச்சர் கில்லி சரத்தின் பதவியைப் பறிக்கலாம் என்று தவெகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் ரகசியத் தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிபோவது கிட்டத்தட்ட உறுதி என்றே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
