விருதுநகர் : அருகே கட்டனார்பட்டியில் உள்ள வனஜா பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19) ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்த 16 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், முதல் தகவல் அறிக்கையில் (FIR) தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஆலை நிர்வாகம் விதிகளை மீறி அதிக அளவில் வெடி பொருட்களை தயாரிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. அது மட்டுமின்றி, மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாக அதிக வெடி பொருட்களை ஒரே நேரத்தில் கலந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது ஏற்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்காமல், தொழிலாளர்களை அதிக வெடிகளை தயாரிக்க வைத்ததும் விபத்துக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் பெண் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உடற்கூராய்வு பணிக்காக நெல்லை மற்றும் மதுரையிலிருந்து சிறப்பு மருத்துவக் குழுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தோரின் குடும்பத்தினர், நிவாரண நிதி வழங்கப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். தேர்தல் ஆணையம் இன்னும் நிவாரண நிதி தொடர்பாக முடிவெடுக்காத நிலையில், இந்த அறிவிப்பு வெளிடபட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விபத்துக்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த வெடி விபத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், காயமடைந்தோருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
