கோவை : 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் வருத்தத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியும் தெரிவித்துள்ள அவர், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் தனது பதிவில், “கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “தங்கள் உயிருக்கு உயிரான குழந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் சிறுமியின் குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், “சம்பவம் குறித்து தீவிர மற்றும் விரைவான விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
அதேநேரத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை கிடைக்க தமிழக அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று தனது பதிவில் முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளார்.
