சென்னை :தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19, 2025) மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் மூலம் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டறிய முடியாதவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் போன்ற தவறான அல்லது தேவையற்ற பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக வெளியான நீக்க விவரங்களில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,53,373 வாக்காளர்கள், சென்னை மாவட்டத்தில் 14,25,018 வாக்காளர்கள், தேனி மாவட்டத்தில் 1,25,739 வாக்காளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,74,549 வாக்காளர்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,74,274 வாக்காளர்கள், கடலூர் மாவட்டத்தில் 2,46,818 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் SIR-க்கு முன் 40,04,694 வாக்காளர்கள் இருந்த நிலையில், வரைவு பட்டியலில் 25,79,676 வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியுள்ளதில் முன்பு 16,80,626 வாக்காளர்கள் இருந்த நிலையில், SIR பின்னர் 15,06,077 ஆக குறைந்துள்ளது.
இந்த வரைவு பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமானhttp://electoralsearch.eci.gov.inஅல்லது voters.eci.gov.in என்ற தளத்தில் தேடி அறிந்து கொள்ளலாம். பெயர் நீக்கப்பட்டவர்கள் அல்லது தவறுகள் இருந்தால், படிவம் 6 மூலம் பெயர் சேர்க்க அல்லது ஆட்சேபனை தெரிவிக்க ஜனவரி 18, 2026 வரை வாய்ப்பு உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்படும்.
